மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்திற்கு இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மோதல்போக்கு இருந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டும், அப்பாவி குழந்தைகள் நடுத்தெருவிற்கு வந்தும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடின்றி முகாம்களில் வாழ்க்கை நடத்தும் நிலை இன்று வரை தொடர்கிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கூட முன்னதாக முன்னாள் முதலமைச்சர் மறைந்த மைரெம்பாம் கொய்ரெங் சிங் வீட்டின் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டது. இதில் 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்ந்தனர்.
அதேபோல் ஜிரிபாம் மாவட்டத்தில் வன்முறையாளர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மீண்டும் மணிப்பூரில் வன்முறை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மணிப்பூருக்காக ஒரு நொடி கூட செலவிடாத பிரதமராக மோடி இருக்கிறார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”16 மாதங்களில் மணிப்பூருக்காக ஒரு நொடி கூட பிரதமர் மோடி செலவிடவில்லை.
இன்னும் மணிப்பூரில் வன்முறை கட்டுக்கடங்காமல் தொடர்கிறது. தேர்தல் பேரணிகளில் கலந்து கொண்டு அரசியல் செய்வதில் மோடி பிசியாக இருக்கிறார். வன்முறையை நிறுத்த பிரதமர் மோடி ஏன் விரும்பவில்லை ? என மணிப்பூர் மக்கள் கேட்கிறார்கள்.” என தெரிவித்துள்ளார்.