பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் சித்தார்த்நகர் அருகே இருக்கும் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தனது உடல்நிலை சரியில்லாத கணவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பணம் இல்லாத காரணத்தினால், தனது வீட்டில் வைத்தே தனது கணவரை பார்த்துக்கொள்ள எண்ணியுள்ளார்.
அதன்படி கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி அந்த பெண், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனது கணவரை சகோதரர் உதவியுடன் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த சூழலில் செல்லும் வழியில் அந்த பெண்ணை அம்புலன்ஸ் ஓட்டுநர், முன் சீட்டில் அமருமாறும், அப்போதுதான் போலீஸ் சோதனையில் பிரச்னை இருக்காது என்றும் கூறி வற்புறுத்தியுள்ளார். அந்த பெண்ணும் அமர்ந்துள்ளார்.
இதையடுத்து ஓடும் ஆம்புலன்சில் வைத்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் இதனை தடுக்க முயன்றபோது, அவரை தாக்கியுள்ளனர். மேலும் அந்த பெண்ணின் கணவரின் ஆக்சிஜன் மாஸ்க்கை கழற்றிவிட்டு, அவரையும் அந்த பெண்ணின் சகோதரரையும், அந்த பெண்ணையும் ஓடும் ஆம்புலன்சில் இருந்து கீழே தள்ளியுள்ளனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பணமும், பெண்ணின் நகைகளையும் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் மற்றும் அவரது உதவியாளரும் கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர். கீழே தள்ளிவிட்டதில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரது கணவரை மீட்டு பஸ்தி மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்று மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.