கடந்த ஆண்டு, பா.ஜ.க.வின் பிரிஜ் பூஜன் இழைத்த பாலியல் வன்முறைகளுக்கு எதிராக நீதிகேட்டு சாலைகளில் 140 நாட்கள் அழுகையுடன் போராடிய, இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், நாட்டையே திரும்பி பார்க்க வைக்கும் வையில், 2024 ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னெறினார்.
இதனால், நாடு முழுவதும் வினேஷ் போகத் குரலே ஓங்கி ஒலித்தது. கடந்த ஆண்டு வினேஷ் போகத்தின் உரிமை குரலை புறந்தள்ளிய பிரதமர் மோடி, தற்போது அவரின் வெற்றி முகத்தை எவ்வாறு எதிர்கொள்வார் என்ற கேள்விகளும் ஒலித்தது.
ஆனால், அவ்வொலிகள் சிறுது நேரமே நீடித்தது. காரணம், இறுதிப்போட்டி நடைபெறுவதற்கு சில மணிநேரத்திற்கு முன், வெறும் 100 கிராம் எடை அதிகமாக இருக்கிறார் என்ற காரணத்திற்காக ஒலிம்பிக் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார் வினேஷ் என அறிவித்தது இந்திய ஒலிம்பிக் அமைப்பு.
இதனால், அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்களும் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்திய மக்களும், குழப்பமடைந்தனர். அது எவ்வாறு தகுதிநீக்கம் நடக்க இயலும், ஏதோ சதி நடந்திருக்கிறது என்று வினேஷிற்கு ஆதரவு குரல் எழுப்பினர்.
அமெரிக்க மல்யுத்த வீரர் ஜோர்டன் முதற்கொண்டு, வினேஷிற்கு ஆதரவாக பதிவிட்டனர்.
இந்நிலையில், நேற்றைய நாள் முதல், வினேஷ் தகுதிநீக்கத்தில் பல கேள்விகள் உள்ளன. எனவே, அது குறித்த விவாதம், நாடாளுமன்றத்தில் நடைபெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
எனினும், அதனை ஒரு பொருட்டாக கூட எண்ணாமல், இரண்டாவது நாளாக விவாதத்திற்கு அனுமதி தர மறுத்தது ஒன்றிய பா.ஜ.க அரசு. இதனால், கடும் அதிருப்தி அடைந்து, இந்தியா கூட்டணி எம்.பிக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
நேற்றைய நாள் (07.08.24), நாடாளுமன்ற வளாகத்தில், இந்தியா கூட்டணி எம்.பிக்கள், வினேஷிற்கு ஆதரவாக போராட்டம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.