இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு வழக்கு : வாதமும் உச்சநீதிமன்ற உத்தரவும்... முழு விவரம் !

நீட் வினாத்தாள் கசிவு வழக்கு : வாதமும் உச்சநீதிமன்ற உத்தரவும்... முழு விவரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நடப்பு ஆண்டில் நடைபெற்ற இளநிலை (UG) படிப்புகளுக்கான நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவில் ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் மோசடி நடந்துள்ளது. இவையனைத்தும் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை மாணவர்கள், பெற்றோர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளனர். நாள்தோறும் நடைபெறும் விசாரணையில் திடுக் தகவல்கள் வெளியாகி வந்த வண்ணமாக இருக்கிறது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பலரும் வலியுறுத்தி வந்த போதிலும், ரத்து செய்யப்படாது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு வழக்கு : வாதமும் உச்சநீதிமன்ற உத்தரவும்... முழு விவரம் !

இந்த விவகாரம் பூதகரமாகியுள்ள நிலையில், நீட் முதுநிலை (PG) தேர்வு நடைபெறுவதற்கு வெறும் 12 மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியது. இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து என நீட் தேர்வில் மட்டுமே பல்வேறு குளறுபடிகள் அரங்கேறியுள்ள நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டது.

இந்த சூழலில் விடுமுறை காலம் முடிந்து இன்று (ஜூலை 8) நீதிமன்றத்தில் நீட் தொடர்பான 36 வழக்குகள் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கேள்வித்தாள் கசிவு குறித்த முழு விசாரணை விபரங்களை சிபிஐ விரிவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, வழக்கை வரும் 11-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு வழக்கு : வாதமும் உச்சநீதிமன்ற உத்தரவும்... முழு விவரம் !

=> நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் :

ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மே 4 ஆம் தேதி கேள்வித்தாள் telegram ஊடகத்தில் வெளியாகி உள்ளது. விடைகளும் வெளியாகி இருந்தது. இந்த சம்பவம் பீகார் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அந்த வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ளது.

நடந்து முடிந்த நீட் தேர்வில் 67 பேர் முதலிடம் பெற்றதும், அதில் ஒரே தேர்வு மையத்தில் ஆறு பேர் முதலிடம் பெற்றதும் இதுவரை நடந்திராத ஒன்று. நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. முறைகேடுகள் காரணமாக பலனடைந்தவர்கள் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் மறு தேர்வு நடத்த வேண்டும்

பீகார் போலீஸார் விசாரணையில் நீட் தேர்வு மோசடி திட்டமிட்டு பல கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தேசிய தேர்வு முகமைக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை தேவை. இந்த நிலையில் மறுதேர்வு நடத்துவது தான் முறையாக இருக்கும். பீகார், குஜராத், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் ஆறு வழக்குகளை சி.பி.ஐ பதிவு செய்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு வழக்கு : வாதமும் உச்சநீதிமன்ற உத்தரவும்... முழு விவரம் !

=> உச்சநீதிமன்றம் கேள்வி மற்றும் உத்தரவு :

இதுவரை நடைபெற்றுள்ள விசாரணையில் நீட் தேர்வின் நம்பகத்தன்மை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததுள்ளது. நீட் தேர்வு கேள்வித்தாள் எப்போது பாரத ஸ்டேட் வங்கி, கனரா பேங்க் லாக்கர்களுக்கு அனுப்பப்பட்டது? எப்போது திறக்கப்பட்டது? வெளிநாட்டு தேர்வு மையங்களுக்கு எப்போது கேள்வித்தாள் அனுப்பப்பட்டது? எப்படி அனுப்பப்பட்டது?

கேள்வித்தாள் எப்போது தயாரிக்கப்பட்டது? எப்போது அச்சகத்தில் அச்சிடப்பட்டது? அச்சகத்துக்கு எப்படி அனுப்பப்பட்டது? கேள்வித்தாள் எப்போது தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டது? எப்படி அனுப்பப்பட்டது? ஆகிய விபரங்களை தேதி வாரியாக தேசிய தேர்வு முகமை தெரிவிக்க வேண்டும்.

கேள்வித்தாள் சமூக ஊடகங்கள் வழியாக கசிந்திருந்தால் அது பெருமளவுக்கு மாணவர்களை சென்று சேர்ந்திருக்கும். கேள்வித்தாள் கசிவு பெருமளவுக்கு நடந்திருந்தால், மறு தேர்வுக்கு உத்தரவிட வேண்டி வரும். மேலும் 67 மாணவர்கள் முதலிடம் பெற்றதிலும் சந்தேகம் உள்ளது. இது உண்மையென்றால், மறுதேர்வு நடத்தப்பட வேண்டியிருக்கும்.

சிபிஐ எத்தனை வழக்குகளை பதிவு செய்துள்ளது செய்துள்ளது என்ற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். கசிந்த கேள்வித் தாள் எந்த அளவுக்கு பரவலாக மாணவர்களை சென்றடைந்துள்ளது என்பதை கண்டறிவது முக்கியம். கேள்வித்தாள் கசிவை யாரும் எதனாலும் மறுக்க முடியாது. இந்த விவகாரம் 24 லட்சம் மாணவர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் மிக கவனமாக கையாள வேண்டி உள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு வழக்கு : வாதமும் உச்சநீதிமன்ற உத்தரவும்... முழு விவரம் !

எனவே ஒன்றிய அரசு இது தொடர்பான விசாரணை விவரங்களை விரிவாக தாக்கல் செய்ய வேண்டும். பல ஆண்டுகள் படித்து மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். மீண்டும் மறுத்தேர்வு என்பது, மாணவர்களை சிரமத்துக்கு உள்ளாக்கும். எனவே கேள்வித்தாள் கசிவின் வியாப்தியை கண்டறிய வேண்டி உள்ளது.

கேள்வித்தாள் கசிவால் பயனடைந்தவர்கள் எத்தனை பேர்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? நாடு முழுவதும் எத்தனை பேருடைய தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது? பலனடைந்த மாணவர்களின் முழு விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டனவா? இல்லை விசாரணை தொடர்கிறதா? என்ற விவரங்கள் தெரிய வேண்டும்.

அவ்வாறு விசாரணை முடியாவிட்டால் மறு தேர்வு நடத்துவதை தவிர வேறு வழி இல்லை. கேள்வித்தாள் கசியவில்லை என்று தொடர்ந்து மறுப்பது மேலும் பாதிப்பை தான் ஏற்படுத்தும் கேள்வித்தாள் மோசடி குறித்து பல் தொழில்நுட்ப குழு ஒன்றை உச்ச நீதிமன்றமே அமைக்க ஆலோசிக்கிறோம். கேள்வித்தாள் மோசடியை சைபர் விசாரணை குழுவால் கண்டுபிடிக்க முடியாவிட்டால் உள்துறை அமைச்சகத்தின் உதவியை நாட வேண்டும்.

- மேற்கண்ட அனைத்து விபரங்களையும் வரும் 10-ம் தேதி மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்து பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை 11-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து தீர்ப்பளித்துள்ளது.

banner

Related Stories

Related Stories