ஒன்றிய பா.ஜ.க அரசு தங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து மிரட்டி வருகிறது. அப்படிதான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபான கொள்கை வழக்கில் சிறையில் அடைத்தது.
கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக ஜாமின் கூட கிடைக்க விடாடல் அவரை சிறையில் வைத்திருந்தது ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு. இதையடுத்துதான் உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.
இதையடுத்து நேற்று ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் தொண்டர்களிடையே உரையாற்றினார். பின்னர் இன்று மாலை டெல்லி மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்மேற்கொண்டார். அப்போது ஆம் ஆத்மி தொண்டர்கள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து நேற்றில் இருந்தே அரவிந்த் கெஜ்ரிவால் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மோடியின் உத்தரவாதங்கள் எதுவும் கடந்த பத்து ஆண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 15 லட்ச ரூபாய் வழங்குவதாக தெரிவித்தது செயல்படுத்தப்படவில்லை. 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளுக்கு இரட்டிப்பு விலை, குறைந்தபட்ச ஆதரவு விலை வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
சீனா அரசு, இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. ஆனால், அதனை பா.ஜ.க மறுக்கிறது. நம் இராணுவத்திற்கு அதிகளவிலான வலிமை இருக்கிறது. அதனை கொண்டு, நம் நாட்டின் நிலத்தை மீட்டெடுப்பதே இந்தியா கூட்டணியின் நோக்கம். குறிப்பாக, ஆட்சிக்கு வந்ததும், இராணுவத்தினருக்கு அச்சுறுத்தலாக இருக்கிற அக்னிவீர் திட்டம் கைவிடப்படும்.
புல்லட் ரயில் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்று அடுக்கடுக்காக மோடியின் வாக்குறுதிகளை பட்டியலிட்டு அவை எதுவும் செயல்படுத்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை” என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினர்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “அவர்களால் (பாஜக) எங்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முடியவில்லை. எங்கள் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முடியவில்லை. அதேபோல் பஞ்சாப் அரசையும் அவர்களால் சிதைக்க முடியவில்லை. அவர்களின் முழு திட்டமும் தோல்வியடைந்தது.” எனத் தெரிவித்துள்ளார்.