மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
மறுபக்கம் இந்துத்துவ அமைப்புகளை வலுப்படுத்தி அதன் மூலம் நாட்டை மதத்தீவிரவாதிகளிடம் அளிக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. அதன்படி அரசின் பல்வேறு அமைப்புகளில் இந்துத்துவவாதிகளை நுழைக்கும் திட்டத்தோடு பாஜக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது ராணுவப் பள்ளிகளை இந்துத்துவமயமாக்கும் திட்டத்தோடு பாஜக களமிறங்கியுள்ளது. இந்திய ராணுவத்தில் சேருவதற்கு மாணவர்களை தயார்படுத்துவதை பிரத்யேக நோக்கமாக கொண்டு செயல்படும் ராணுவப் பள்ளிகள் நாடு முழுவதும் அமைந்துள்ளது.
அரசால் நடத்தப்பட்டு வந்த இந்த ராணுவப்பள்ளிகள் தனியார்மயமாக்கப்படும் என புதிய கல்வி கொள்கையில் கூறப்பட்டிருந்தது. அதன்படி, 100 சைனிக் பள்ளிகளை தனியார் பங்களிப்புடன் நிறுவ ஒன்றிய அரசு முடிவு செயது அதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், 62% ராணுவ பள்ளிகளில் நடத்தும் அனுமதி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது ஆர்டிஐ மூலம் அம்பலமாகியுள்ளது. அதே நேரம் எந்த ஒரு கிருஸ்தவ, இஸ்லாமிய அமைப்பின் கீழ் செயல்படும் மத சிறுபான்மையின அமைப்புகளுக்கும் இதுவரை இந்த அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற உண்மையும் தெரியவந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.