பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கார்ப்பரேட்களுக்கு சலுகை கொடுக்கும் அரசாகவே செயல்பட்டு வருகிறது. இதுவரை கார்ப்பரேட் நிறுவங்களுக்காக பல லட்சம் கோடி அளவு கடன்களை தள்ளுபடி செய்த பாஜக அரசு, அதனை திரும்பப்பெற மக்களை சுரண்டி வருகிறது.
கார்ப்பரேட்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட பாஜக அரசின் பலமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையும் பொதுமக்களின் சேமிப்பை முழுவதுமாக பறித்துக்கொண்டன. இந்த நிலையில், பாஜக அரசின் இந்த நடவடிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “மோடியின் 'புதிய இந்தியா'வில் டிஜிட்டல் வழிப்பறி!ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன? சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள். சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.
கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்தார்கள்.
அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?” என்று கூறியுள்ளார்.