
மத்தியப் பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டத்தின் அம்பா நகருக்கு அருகிலுள்ள சந்த் கா புரா கிராமத்தில் 34 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே அவரின் கணவர் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் கர்ப்பிணியின் கணவரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தனது கணவர் மீதான புகாரை திரும்பபெரும்படி கர்ப்பிணி பெண் புகார் அளித்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்றவர் தனது கணவர் மீதான புகாரை திரும்பபெரும்படி கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், அவரை அந்த வீட்டில் இருந்த மூன்று ஆண்கள் இழுத்துச்சென்று தாக்கியுள்ளனர். மேலும் கர்ப்பிணி பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதோடு நிற்காத அவர்கள் கர்ப்பிணி பெண்ணை உயிரோடு தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதில் அலறித்துடித்த அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் 80 % தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருவதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஜாமினில் வெளிவந்த அந்த கர்ப்பிணி பெண்ணின் கணவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது வாக்குமூலத்தை மாஜிஸ்ட்ரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், போலிஸார் இதுகுறித்து இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.








