மத்திய பிரதேசம் ஷிவ்புரி பிச்சோர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த பிரீதம் சிங் லோதி. இவரது மகன் தினேஷ் லோதி பழைய கண்டோன்மென்ட் பகுதியில் வேகமாகச் சொகுசு காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது சாலையில் நின்று இருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். அதன் அருகே நின்று கொண்டிருந்த குழந்தையின் மீது இருசக்கர வாகனம் விழுந்துள்ளது. இதில் குழந்தைக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உடனே அங்கிருந்த பொதுமக்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும், தினேஷ் லோதி வேகமாக கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய வீடியோவும் சமூகவலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து போலிஸார் தினேஷ் லோதி மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.