இந்தியா

17 நாட்கள் : சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் சொன்ன திகில் அனுபவம்!

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கி மீட்கப்பட்ட தொழிலாளர் அகிலேஷ் சிங் என்பவர் தனது திக் திக் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

17 நாட்கள் : சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் சொன்ன திகில் அனுபவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இங்கு கடந்த 12-ந் தேதி சில்க்யாரா- தண்டல்கான் இடையே இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்ற போது சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், சுரங்கத்துக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், 41 பேரையும் மீட்க தொடர்ந்து பேரிடர் மீட்பு படையினர் தீவிர முயற்சி எடுத்து வந்தனர். சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் சிலநாட்கள் கழித்தே 41 பேர் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகின. உணவுப் பொருட்கள் அனுப்பப்படும் பாதை வழியே வாக்கி டாக்கி அனுப்பப்பட்ட நிலையில், அதன் மூலம் மீட்புப் படையினர் அவர்களுடன் பேசி வந்தனர். தொடர்ந்து தங்கள் கடும் முயற்சிகளில் மீட்பு படையினர் ஈடுபட்ட போதிலும், தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் தாமதமாகிக் கொண்டே வந்தது.

இதையடுத்து வெளிநாட்டிலிருந்து ஆகர் ஏந்திரம் வரவழைத்து மீட்கும் பணி முழு வேகத்தில் நடைபெற்றது. தொழிலாளர்கள் அருகே சென்ற போது ஆகர் ஏந்திரத்தின் பிளேடுகள் உடைந்து, பழுதடைந்தது. இதனால் இனி அந்த இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் மாற்று ஏற்பாடாக, எலி வளை சுரங்கம் தோண்டும் முறை பயன்படுத்தப்பட்டது.

17 நாட்கள் : சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் சொன்ன திகில் அனுபவம்!

பின்னர் கை வேலைப்பாட்டாகவே சுரங்க தொழிலாளர்கள் 13 மீட்டர் தொலைவை 21 மணி நேரத்தில் தோண்டி இரும்பு குழாய்களை வெற்றிகரமாகப் பொருத்தினர். பிறகு இந்த குழாய்கள் வழியாக ஒவ்வொரு தொழிலாளராக 41 பேரும் வெளியே கொண்டு வந்தனர். அவர்களுக்கு உரிய மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சுரங்கத்தில் சிக்கி மீட்கப்பட்ட அகிலேஷ் சிங் என்ற தொழிலாளி 18 நாட்கள் சுரங்கத்திலிருந்த திக் திக் நிமிடங்களை ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பகிர்ந்துள்ளார். அதில், "நான் சுரங்கத்தில் இருந்து வீட்டுக்குச் செல்வதற்காக வெளியேறியபோது திடீரென சரிவு ஏற்பட்டது. முதல் 18 மணி நேரம் என்ன நடந்தது என்றே எங்களுக்குத் தெரியவில்லை. பிறகுதான் நாங்கள் சிக்கிக் கொண்டதை உணர்ந்தோம்.

பின்னர் தண்ணீர் குழாய் ஒன்றை திறந்துவிட்டு நாங்கள் சுரங்கத்தில் சிக்கிக்கொண்டதை தெரியப்படுத்த முயற்சித்தோம். இந்த யோசனை எங்களுக்கு உதவியது. இந்த தண்ணீர் குழாய் வழியாகதான் எங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது. பல கஷ்டங்களைக் கடந்து இன்று நாங்கள் வெளியே வந்து விட்டோம். மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு வீட்டிற்கு செல்ல திட்டமிட்டு உள்ளேன். 2 மாதங்கள் நன்றாக ஓய்வெடுக்கப் போகிறேன்." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories