இந்தியா

”வாய்ஜாலம் பேரிடரை தடுக்காது” : உத்தரகாண்ட் சுரங்க சம்பவத்தை சுட்டிக்காட்டும் ஜெய்ராம் ரமேஷ்!

வாய்ஜாலம் பேரிடரை தடுக்காது என உத்தரகாண்ட் சுரங்க சம்பவத்தைக் காங்கிரஸ் நிர்வாகி ஜெய்ராம் ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

”வாய்ஜாலம் பேரிடரை தடுக்காது” : உத்தரகாண்ட் சுரங்க சம்பவத்தை சுட்டிக்காட்டும் ஜெய்ராம் ரமேஷ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இங்கு கடந்த 12-ந் தேதி சில்க்யாரா- தண்டல்கான் இடையே இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்ற போது சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், சுரங்கத்துக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், 41 பேரையும் மீட்க தொடர்ந்து பேரிடர் மீட்பு படையினர் தீவிர முயற்சி எடுத்து வந்தனர். சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் சிலநாட்கள் கழித்தே 41 பேர் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகின. உணவுப் பொருட்கள் அனுப்பப்படும் பாதை வழியே வாக்கி டாக்கி அனுப்பப்பட்ட நிலையில், அதன் மூலம் மீட்புப் படையினர் அவர்களுடன் பேசி வந்தனர். தொடர்ந்து தங்கள் கடும் முயற்சிகளில் மீட்பு படையினர் ஈடுபட்ட போதிலும், தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் தாமதமாகிக் கொண்டே வந்தது.

இதையடுத்து வெளிநாட்டிலிருந்து ஆகர் ஏந்திரம் வரவழைத்து மீட்கும் பணி முழு வேகத்தில் நடைபெற்றது. தொழிலாளர்கள் அருகே சென்ற போது ஆகர் ஏந்திரத்தின் பிளேடுகள் உடைந்து, பழுதடைந்தது. இதனால் இனி அந்த இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் மாற்று ஏற்பாடாக, எலி வளை சுரங்கம் தோண்டும் முறை பயன்படுத்தப்பட்டது.

”வாய்ஜாலம் பேரிடரை தடுக்காது” : உத்தரகாண்ட் சுரங்க சம்பவத்தை சுட்டிக்காட்டும் ஜெய்ராம் ரமேஷ்!

பின்னர் கை வேலைப்பாட்டாகவே சுரங்க தொழிலாளர்கள் 13 மீட்டர் தொலைவை 21 மணி நேரத்தில் தோண்டி இரும்பு குழாய்களை வெற்றிகரமாகப் பொருத்தினர். பிறகு இந்த குழாய்கள் வழியாக ஒவ்வொரு தொழிலாளராக 41 பேரும் வெளியே கொண்டு வந்தனர். அவர்களுக்கு உரிய மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டாலும் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளுக்கான தொழில் நுட்பத்தில் எவ்வளவு பலவீனமாக இருக்கிறோம் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது. இந்நிலையில், வாய்ஜாலம் பேரிடரை தடுக்காது என ஒன்றிய அரசுக்குப் பேரிடர் விளைவுகள் குறித்துச் சுட்டிக்காட்டியுள்ளார் காங்கிரஸ் நிர்வாகி ஜெய்ராம் ரமேஷ்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "மேற்கு இமயமலையின் பல்லுயிர் சூழல் சந்தித்துக் கொண்டிருக்கும் நுட்பமான சூழலியல் பிரச்சினைகளைச் சுரங்க விபத்து நமக்கு உணர்த்தியிருக்கிறது.

இப்பகுதியில் நேரும் கட்டுமானப் பணிகளுக்கு நடத்தப்படும் சூழலியல் மதிப்பீடு முறை இச்சம்பவத்தில் தோற்றிருக்கிறது. இந்த சுரங்கம் அமைக்கப்பட்ட சார் தாம் திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள், சூழலியல் தாக்க மதிப்பீட்டைத் தவிர்த்து வழங்கப்பட்டிருக்கிறது.

இமயமலைப் பகுதியில் முன்னெடுக்கப்படும் எதிர்காலத் திட்டங்கள் நிறுத்தப்பட்டு, முறையான சூழலியல் ஆய்வுக்கு அவை உட்படுத்தப்பட வேண்டும். பிரச்சினையைப் பொருட்படுத்தாமல் பேசப்படும் வெறும் வாய் வார்த்தைகள், நமக்கு இத்தகைய பேரிடர் விளைவுகளை மட்டும்தான் வழங்கும்" தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories