கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகர் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கோரிக்கையின்படி புதிதாக பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி கன்னிகம் என்ற சாலையில் கடந்த 21-ம் தேதி புதிய நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடையானது எஃகு உலோகத்தால் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும்.
இந்த நிழற்குடையானது பெங்களூரு மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்குப் பின்புறத்திலும், கர்நாடக பேரவைக் கட்டடத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவுக்கும் குறைவான தூரத்திலும் அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் பல நாட்கள் கோரிக்கை அண்மையில் நிறைவேற்றப்பட்டதால் மக்கள் நிம்மதியில் இருந்தனர். ஆனால் தற்போது அந்த நிழற்குடைதான் காணாமல் போயுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி அமைக்கப்பட்ட இந்த நிழற்குடை, ஆகஸ்ட் 28-ம் தேதி பார்க்கையில் இரவோடு இரவாக காணாமல் போயுள்ளது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் இருந்தனர். இதைத்தொடர்ந்து இந்த நிகழ்வு குறித்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் இதற்கு சரியான விளக்கம் அளிக்காமல், தங்களுக்கு தெரியாது என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் பொதுமக்கள் சார்பில் கடந்த செப்.30-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிரமாகி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெங்களுருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.