இந்தியா

”மணிப்பூரில் சட்ட ஒழுங்கை மீட்டெடுப்பதில் படுதோல்வி அடைந்த விஸ்வகுரு”: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

மணிப்பூரில் சட்ட ஒழுங்கு மீட்டெடுப்பதில் பா.ஜ.க அரசு படுதோல்வி அடைந்துள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”மணிப்பூரில் சட்ட ஒழுங்கை மீட்டெடுப்பதில் படுதோல்வி அடைந்த விஸ்வகுரு”: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வன்முறை மூன்று மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இம்மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவர ஒன்றிய பா.ஜ.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.

அண்மையில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூட மணிப்பூர் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் ஒன்றிய அரசு விவாதத்திற்கு மறுத்தது. மேலும் 150 நாட்களுக்கு மேல் வன்முறை நீடித்து வரும் நிலையிலும் கூட பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாமல் இருந்து வருகிறார். ஆனால் வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறார். இதற்கு இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்

இந்நிலையில் மணிப்பூரில் காணாமல் போன 20 வயது மாணவனும், 17 வயது மாணவியும் காட்டில் இறந்த நிலையில் கிடக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மீண்டும் மணிப்பூரில் வன்முறை வெடித்துள்ளது. பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மணிப்பூர் மாநிலம் பற்றமான மாநிலம் என தற்போது அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இணையச் சேவை மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் சட்ட ஒழுங்கு மீட்டெடுப்பதில் பா.ஜ.க அரசு படுதோல்வி அடைந்துள்ளது என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள x சமூகவலைதள பதிவில், "மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை மிகுந்த கவலை அளிக்கிறது.

எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் 'விஸ்வகுரு' மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதில் படுதோல்வி அடைந்துள்ளார். இணையச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம், இரண்டு மெய்தி மாணவர்கள் கொல்லப்பட்டது போன்ற பயங்கரமான சம்பவங்களை அம்பலப்படுத்தியுள்ளது.இது முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கம் மீண்டும் இணையச் சேவையை நிறுத்தியுள்ளது. மாநில மற்றும் ஒன்றியத்தில் உள்ள பா.ஜ.க அரசாங்கங்கள் பொறுப்பேற்று மணிப்பூரைக் காப்பாற்ற வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories