மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீட்டோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதிலிருந்து இணைய உலகம் செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் Artificial Inteligence-ஐ பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது.
அண்மையில் கூட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்தி வாசிப்பாளரை உருவாக்கி, ஒடிசா செய்தி தொலைக்காட்சி ஒன்று சாதனை படைத்துள்ளது. இப்படி AI தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கேரளாவில் பண மோசடி நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன். இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. இதில் பேசியவர் இவரது நண்பர் போன்று இருந்துள்ளார். மேலும் குரலும் அவரை போன்றே இருந்துள்ளது.
இதனால் நண்பர்தான் பேசுகிறார் என நம்பி அவருடன் பேசியுள்ளார். அப்போது அவரது உறவினர் ஒருவருக்கு மருத்துவச் செலவிற்காக ரூ.40 ஆயிரம் தேவைப்படுகிறது. கூகுள் பேயில் அனுப்பி உதவு செய்யும் படி கூறியுள்ளார்.
இதை நம்பி ராதா கிருஷ்ணனும் ரூ.40 ஆயிரத்தை அந்த நபர் சொன்ன எண்ணிற்கு அனுப்பியுள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைத்து ரூ.30 ஆயிரம் அனுப்பும் படி கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்து, தங்களுக்குத் தெரிந்த சில விஷயங்களைக் கேட்டுள்ளார்.
அப்போது அந்த நபர் உடனே செல்போனை கட் செய்துள்ளார். மீண்டும் தொடர்பு கொண்டும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்து இது குறித்து ராதா கிருஷ்ணன் சைபர் குற்றப் பிரிவு போலிஸ் புகார் கொடுத்தார்.
இது குறித்து போலிஸார் விசாரித்தபோதுதான் AI தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நண்பர் உருவத்தில் பேசி ரூ.40 ஆயிரம் பண மோசடி செய்தது தெரியவந்தது. தற்போது AI தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் இதைப் பயன்படுத்தி மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.