புதுச்சேரி திருக்கனூர் வம்புபட்டு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (43). புதுச்சேரி பொதுபணித்துறையில் பணியாற்றி வரும் இவர், தனது மனைவி மகன், பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள் இருக்கும் நிலையில், அவர்களுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.
இந்த சூழலில் குடிபோதைக்கு அடிமையான சுந்தரம் கடந்த 10 ஆம் தேதி இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தனது தந்தை விவசாயியான சுப்புராயன் (85) உடன் சொத்து பிரச்சினை தொடர்பாக பேசி உள்ளார். சிறிது நேரத்தில் தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தந்தை சுப்பராயன் தட்டால் சுந்தரத்தை அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த மகன் சுந்தரம், வயது முதிர்ந்த தந்தை என்றும் பாராமல் அவரை கதவில் தள்ளிவிட்டு தாக்கி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சுப்புராயனை, வீட்டில் இருந்தவர்கள் புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கே சுப்புராயன் கீழே விழுந்ததாக கூறி சிகிச்சை அளித்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் நிலத்திற்கு செல்வதற்காக சுப்புராயன் வீட்டில் இருந்து கிளம்பியபோது, வீட்டருகே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுப்புராயன் தடுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்ததாக அவரின் மனைவியும், மகன் சுந்தருமும் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இறந்த சுப்புராயனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே உடற்கூறாய்வில் சுப்புராயன் அடித்து கொல்லப்பட்டதாக தெரியவந்தது.
இதை தொடர்ந்து, போலீசார் அவரது மகன் மற்றும் மனைவியை காவல் நிலையம் அழைத்து கிடுக்குபிடி விசாரணை நடந்தினர். அப்போது சுந்தரம்தான், தனது தந்தையை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து சுந்தரத்தை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சொத்து பிரச்சினைகாக தந்தையை மகன் அடித்து கொலை செய்து விட்டு கீழே விழுந்ததாக நாடகமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.