ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக மனோகர் லால் கட்டார் உள்ளார். இந்த மாநிலத்தில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் காவல்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உடல் பருமனாக உள்ள போலிஸார் அடுத்த மூன்று மாதத்திற்குள் உடல் எடையைக் குறைக்கவேண்டும் என உள்துறை அமைச்சர் அணில் விஜ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், "பல போலிஸார் உடல் பருமனாக இருக்கின்றனர்.
காவல்துறையில் குற்றங்களைத் தடுக்க போலிஸாருக்கு உடல் தகுதி முக்கியம். எனவே அடுத்த மூன்று மாதத்திற்குள் போலிஸார் உடல் எடையை குறைக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்காக போலிஸார் பணிமாற்றம் செய்யப்படுவார்கள். அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அரசின் இந்த உத்தரவு போலிஸார் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் பொதுமக்கள் இந்த உத்தரவை வரவேற்றுள்ளனர். ஏற்கனவே அசாம் மாநிலத்தில் இதேபோன்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.