சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் வாணிப கழகம் வாயிலாக மதுபான கொள்முதல், விற்பனை நடைபெறுகிறது. இதில் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் சத்தீஸ்கர் மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், அசானுதீன் அமனுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது மூத்த வாக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், "சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரைச் சிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறிச் செயல்படுகிறது.
52 அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை முதலமைச்சருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கத் துன்புறுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறையின் ஒரே இலக்கு முதலமைச்சர்தான். மாநிலத்தில் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு எந்த அதிகார வரம்பும் இல்லை. சட்ட வரம்பை மீறி நடத்தும் அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடைவிதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், ”ஏன் மாநிலத்தில் அச்சமான சூழலை உருவாக்குகிறீர்கள்? என்று அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பினர். மேலும், குற்றம் நடந்திருந்தால் சரியான நபரைக் கண்டுபிடிக்க வேண்டும். அனைவரையும் குற்றவாளிகளாக்கக் கூடாது. குற்றம் உறுதிப்படும் வரை காத்திருக்க வேண்டும்.
விசாரணை அமைப்புக்கள் சாதாரண மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உண்மையான வழக்குகளைக் கூட மக்கள் நம்ப மாட்டார்கள்” என கூறி அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்தனர். பின்னர் வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.