
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரண் படேல். இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த 2ம் தேதி குஜராத்தில் இருந்து ஜம்மு - காஷ்மீருக்கு விமானம் மூலம் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்த அதிகாரிகளிடம் 'நான் பிரதமரின் அலுவலக அதிகாரி' என கூறியுள்ளார். இதனால் அவருக்குக் குண்டு துளைக்காத கார் மற்றும் இஸட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வசதிகளுடன் அவர் ஜம்மு காஷ்மீரில் சொகுசாகச் சுற்றி வந்துள்ளார். மேலும் பிரதமர் அலுவலக அதிகாரி என கூறியதால் கிரண் படேலுக்கு ஸ்ரீநகரில் உள்ள ஐந்து நட்சத்திர சொகுசு விடுதியில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜம்மு காஷ்மீர் அதிகாரிகளிடம் இங்குள்ள ஹோட்டல் வசதிகள் குறித்து பிரதமர் அலுவலகம் ஆய்வு செய்யச் சொன்னதாகவும், அதற்காக இங்கு வந்துள்ளதாகவும் குறியுள்ளார். மேலும் டெல்லியில் உள்ள அதிகாரிகளின் பெயர்களைக் கூறி அவர்கள் தனது நண்பர்கள் என அவர்களை நம்பவைத்துள்ளார்.
இதற்கிடையில், டெல்லியிலிருந்து விஐபி குறித்த தகவல்கள் எதுவும் வராததால் கிரண் படேல் மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து ஸ்ரீநகரில் தங்கியிருந்த அறைக்குச் சென்று அவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
அப்போதுதான் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரி என மோசடி செய்துள்ளது தெரியவந்தது.மேலும் குஜராத்தின் பிரபலமான மோசடி மன்னன் என்பதும் தெரிந்ததை அடுத்து அவரை போலிஸார் கடந்த 3ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து கிரண் படேல் 15 நாட்கள் நீதிமன்றம் காவல் வைக்கப்பட்டுள்ளார்.

கிரண் படேல் இப்படி மோசடி செய்து வருவது இது முதல்முறையில்லை. இதற்கு முன் இப்படி இரண்டு முறை ஜம்மு காஷ்மீர் வந்து சென்றுள்ளார். அப்போது பொதுமக்கள் சாதாரணமாகச் சென்று விடமுடியாத பல இடங்களுக்கு இவர் ராணுவ பாதுகாப்புடன் சென்றுள்ளார். அந்த வீடியோக்களை எல்லாம் இவர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து குஜராத் மோசடி மன்னனுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.








