கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் இந்த ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் பா.ஜ.க மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ மதல் விருப்பக்ஷாவின் மகன் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகச் சிக்கியுள்ளது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தனது 20 வருட அரசியல் வாழ்க்கையில் பா.ஜ.கவை போல் ஒரு ஊழல் அரசை நான் கண்டதே இல்லை என பா.ஜ.கவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ புட்டண்ணா பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் பா.ஜ.க சார்பில் பெங்களூரு ஆசிரியர்கள் தொகுதியிலிருந்து மேலவை உறுப்பினராகக் கடந்த ஆண்டு பதவி ஏற்றவர் புட்டண்ணா. இவருக்கான மேலவை பதவிக்காலம் 4 வருடங்கள் மீதமுள்ள நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் இணைந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த புட்டண்ணா,"மக்களுக்கு பணியாற்ற பா.ஜ.கவில் இணைந்தேன். ஆனால் தனது 20 வருட அரசியல் வாழ்க்கையில் பா.ஜ.கபோல் ஒரு ஊழல் அரசைக் கண்டதில்லை. பா.ஜ.க அரசில் எந்த மக்கள் பணியும் செய்ய முடியவில்லை" என குற்றம்சாட்டியுள்ளார். இவரின் இந்த குற்றச்சாட்டுக் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.