இந்தியா

“இமாச்சலில் இன்று AIIMS திறப்பு - மதுரையில் எப்போது ?” : தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!

இமாச்சல பிரதேசத்தில் ரூ.1,470கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை இன்று திறக்கப்பட்டுள்ளது.

“இமாச்சலில் இன்று AIIMS திறப்பு - மதுரையில் எப்போது ?” : தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை மாவட்டம் தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 3 ஆண்டுகளாகியும் 5 கோடி ரூபாயில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.

மாநில அரசிடமிருந்து 224.24 ஏக்கர் நிலம் ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. திட்ட மதிப்பீடு ஆயிரத்து 977 கோடி ரூபாயாக அதிகரித்த நிலையில், ஓராண்டு கழித்து ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து கடன் பெறும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

82 சதவீதம் நிதியான ஆயிரத்து 627 கோடி ரூபாய் ஜப்பானின் ஜைய்கா நிறுவனத்திடம் இருந்து கடன் பெறப்படும். எஞ்சிய 18 சதவிகிதம் மட்டுமே ஒன்றிய அரசு வழங்கும் எனக் கூறப்பட்டது. இந்தச் சூழலிலும், 3 ஆண்டுகளாக எந்தப் பணிகளும் தொடங்க வில்லை. உரிய நேரத்தில் கட்டுமானப் பணி தொடங்காமல் தாமதம் செய்ததால் 713 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டப்படவில்லை என்றாலும், 2021 ஆம் ஆண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, மாணவர் சேர்க்கை நடைபெற்று ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

மதுரை தோப்பூரில் சுற்றுச்சுவரை கட்டியதை தவிர ஒன்றிய அரசு வேறு எந்தப் பணியையும் தொடங்கவில்லை. ஆனால், எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்து விட்டதாக மதுரை வந்த பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து எய்ம்ஸ் கட்டிடத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இருவரும் மருத்துவமனையைத் தேடும் காட்சி ஊடகங்களில் வெளியானது. அங்குள்ள பெயர்ப் பலகை கூட காணவில்லை. “உயர்த்தப்பட்ட நிதிக்கு ஒன்றிய அரசின் அமைச்சரவை ஒப்புதல் தரவில்லை. அதனால் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவில்லை' என்று சு.வெங்கடேசன் எம்.பி. சொல்லி இருக்கிறார்.

“மற்ற மாநிலத்தில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்ட ஒன்றிய அரசு நிதி தரும் போது, தமிழ்நாட்டில் அமையும் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பானில் நிதி பெறுவது ஏன்?' என்று கேட்டுள்ளார் மாணிக்கம் தாகூர் எம்.பி.

இதுதான் தமிழகத்தின் நிலை. ஆனால் அதேநேரத்தில் இமாச்சல பிரதேசத்தில் ரூ.1,470கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

2019ம் ஆண்டு அடிக்கல்நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் பணிகள் துவங்கப்பட்டாமல் இருக்கும் நிலையில் தேர்லை மனதில் வைத்து பா.ஜ.க செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து நேற்றைய தினம் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உண்மையாகவே 95 % பணிமுடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை அக் 5 ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர். அதே 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் இன்னும் பொட்டல்காடாகவே இருக்கிறது. அந்த பொட்டல்காட்டைக் காட்டி 95 சதவிகிதம் என்றால் என்ன? என்று பாடம் வேறு நடத்தப்படுகிறது. ஜெ பி நட்டா சொன்ன 95 சதவிகிதப்பணி அவர் MLA வாக இருந்த பிலாஸ்பூரில் தான் நடந்துள்ளது என்பதை அண்ணாமலை அறிக” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories