பொதுவாக தமிழ்நாட்டில் ஆடி வெள்ளி என்பது போல, வட மாநிலங்களில் 'சவான்' மாதத்தின் திங்கட்கிழமை புனித நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு சவான் மாதம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி தொடங்கியது. இந்த மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவன் கோயிலில் சிறப்பு வழிபடு நடைபெறும்.
இந்த நிலையில், இன்று 'சவான்' மாதத்தின் கடைசி திங்கள் என்பதால் அனைத்து சிவன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஹிகார் நகரில் உள்ள 'காட்டு ஷ்யாம்ஜி' கோயிலில் அதிகாலை சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது இதில் பங்கேற்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அப்போது ஒரே நேரத்தில் கோயில் வாசலை நோக்கி பக்தர்கள் சென்றதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் படுகாயமடைந்ததோடு 3 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து காயமடைந்த பக்தர்கள் அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு இது குறித்து பக்தர்களை கட்டுப்படுத்த போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்படாததே நெரிசலுக்கு காரணம் என்று அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அறிந்ததையடுத்து அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டுவதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். கோயில் நெரிசலில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.