இந்தியா

“பா.ஜ.கவுக்காக வேலைபார்த்த ஃபேஸ்புக்” : ஆய்வின் மூலம் அம்பலம் - அதிர்ச்சி கிளப்பும் கட்டுரை!

பிரபல சர்வதேச ஊடகமான அல்ஜஸீரா வெளியிட்ட ஆய்வுச் செய்தி, அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

“பா.ஜ.கவுக்காக வேலைபார்த்த ஃபேஸ்புக்” : ஆய்வின் மூலம் அம்பலம் - அதிர்ச்சி கிளப்பும் கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பிரபல சர்வதேச ஊடகமான அல்ஜஸீரா வெளியிட்ட ஆய்வுச் செய்தி, அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மக்களவையில் இன்று பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அல்ஜஸீரா வெளியிட்ட கட்டுரையைச் சுட்டிக்காட்டி “ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகப் பெரு நிறுவனங்களோடு ஆளுங்கட்சி இணைந்து செயல்படுகிறது. இதனால் ஃபேஸ்புக் மூலம் மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கின்றனர்” என்றார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயகத்துக்கு மிக மோசமானது” என்று அல்ஜசீரா, தி ரிப்போர்ட்டர்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்தியைச் சுட்டிக்காட்டி பதிவிட்டிருந்தார்.

அந்தச் செய்தியில், “தேர்தலில், பா.ஜ.க-வுக்குச் சலுகை விலை அளித்து ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் ஆதரவாகச் செயல்பட்டுள்ளன” எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த செய்தியாளர்களின் கூட்டமைப்பு Reporters' Collective (TRC) லாப நோக்கமற்றுச் செயல்படும் ஒரு ஊடக அமைப்பாகும். TRC மற்றும் ad.watch எனும் நிறுவனம் இணைந்து ஃபேஸ்புக்கில் வெளிவந்த அரசியல் விளம்பரங்கள் குறித்து ஆய்வு செய்து பல உண்மைகளை வெளிக் கொண்டுவந்துள்ளன.

இந்த ஆய்வின் மூலம் வெளிவந்த தகவல்களை பிரபலமான ஊடகமான அல்ஜசீரா தொடராக வெளியிட்டு வருகிறது. பா.ஜ.க - ஃபேஸ்புக் கூட்டணியின் விளம்பர ஊழல் அரசியல் அரங்கில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக ரகசியமாக நிதியளிக்க ஏராளமான விளம்பரதாரர்களை ஃபேஸ்புக் அனுமதித்துள்ளது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பா.ஜ.கவும் அதன் வேட்பாளர்களும் அதிகாரப்பூர்வமாக 26,291 விளம்பரங்களை 10 கோடியே 4 லட்ச ரூபாய் செலவில் பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கின்றனர். இந்த விளம்பரங்கள் 1.36 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன.

இவையன்றி 23க்கும் மேற்பட்ட ரகசிய மற்றும் பினாமி விளம்பரதாரர்கள் பா.ஜ.கவிற்கு ஆதரவாக 34,884 விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர். இதற்காக 5 கோடியே 83 லட்ச ரூபாயை அவர்கள் ஃபேஸ்புக்கிற்கு கொடுத்துள்ளனர்.

இந்த விளம்பரங்களில் பா.ஜ.கவை புகழ்ந்தும் காங்கிரஸ் தலைவர்களை இழிவுபடுத்தியும், முஸ்லீம் வெறுப்புணர்வை ஊட்டும் விதமாகவும் போலிச் செய்தி வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள் 1.31 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன.

காங்கிரஸ் சார்பில் 6 கோடியே 44 லட்ச ரூபாயில் அதிகாரப்பூர்வமாக விளம்பரங்கள் ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டன. இரண்டு மறைமுக மற்றும் பினாமி நிறுவனங்கள் மட்டுமே 70 லட்ச ரூபாயில் காங்கிரஸுக்கு ஆதரவாக விளம்பரங்கள் வெளியிட்டன.

சராசரியாக 1 மில்லியன் பேருக்கு விளம்பரத்தைக் காட்ட பா.ஜ.கவிடம் ரூ.41,844 ரூபாயும், காங்கிரஸிடம் ரூ. 53,776 ரூபாயையும் வசூலித்துள்ளது ஃபேஸ்புக். ஒரே அளவிலான பார்வையாளர்களைச் சென்றடைய கிட்டத்தட்ட 29 சதவீதம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பெருவாரியான பயனர்களைச் சென்றடைவதற்கு ஃபேஸ்புக் காங்கிரஸ் கட்சிக்குத் தடை விதித்திருப்பதும் ஆளும் கட்சியான பா.ஜ.கவை பெருமளவுக்கு ஊக்குவித்திருப்பதும் இந்த ஆய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.

தேர்தலில் பா.ஜ.கவிற்கு ஆதரவாக ஃபேஸ்புக் சமூக வலைதளம் செயல்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories