இந்தியா

சித்து- சன்னி- அமரீந்தர் சிங் : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 3 பேரும் தோல்வி - என்ன நடக்கிறது பஞ்சாப்பில்?

பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது.

சித்து- சன்னி- அமரீந்தர் சிங் : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 3 பேரும் தோல்வி - என்ன நடக்கிறது பஞ்சாப்பில்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பறிகொடுத்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கிறது.

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 1,304 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ், சிரோன்மனி அகாலிதளம் - பகுஜன் சமாஜ் கூட்டணி, ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வந்தது. மேலும் பா.ஜ.க - பிஎல்சி கூட்டணியும் களத்தில் இருந்தன.

இந்நிலையில் தற்போது 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி 93 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் முன்னிலை வகிக்கிறது; அகாலிதளம் 5 இடத்தில் முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க கூட்டணி 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பாட்டியாலா நகர்ப்புற தொகுதியில் போட்டியிட்ட பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியுள்ளார்.

முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து ஆகிய இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

இதையடுத்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்து பிரச்சினைக்கு காங்கிரஸ் மேலிடம் முற்றுப்புள்ளி வைத்தது. இதையடுத்து, அமரீந்தர் சிங் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தார். அவரது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து களம் கண்டது.

இந்நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பட்டியாலா நகர்ப்புற தொகுதியில் போட்டியிட்ட அமரீந்தர் சிங் தொடர்ந்து, பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில் தற்போது தோல்வியை தழுவியுள்ளார்.

அதேபோல காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான நவ்ஜோத் சிங் சித்துவும் தான் போட்டியிட்ட அமிர்தசரஸ் தொகுதியில் தோல்வியைச் சந்தித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட சம்கவுர் மற்றும் பத்கவுர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளார்.

சரியான தலைமை இல்லாதது, கட்சித் தலைவர்களின் அதிகார மோதல் ஆகியவையே காங்கிரஸ் கட்சியின் பெரும் தோல்விக்கான காரணமாகக் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories