இந்தியா

மோடி அரசுக்கு சிக்கல்... பெகாசஸ் ஒப்பந்தம் குறித்து அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட The New York Times!

பெகாசஸ் உளவு மென்பொருளை இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து இந்திய அரசு வாங்கியது என நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டதைத் தொடர்ந்து, மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

மோடி அரசுக்கு சிக்கல்... பெகாசஸ் ஒப்பந்தம் குறித்து அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட The New York Times!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பெகாசஸ் உளவு மென்பொருளை இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து இந்திய அரசு வாங்கியது என நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் மீண்டும் பெகாசஸ் சர்ச்சை வெடித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ (NSO) நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு (உளவு, ராணுவம்) விற்பனை செய்து வருகிறது.

நாட்டுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டுபவர்களை கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த பெகாசஸ் மென்பொருள் மூலம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம்சாட்டின.

இந்தியாவிலும் பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், அரசியலமைப்புப் பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் இந்த மென்பொருள் மூலம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கடந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முடங்கியது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தால் 3 பேர் கொண்ட தனி விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த விவகாரம் இப்போது மீண்டும் வெடித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில், "இஸ்ரேல் உடனான இரண்டு பில்லியன் பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு கடந்த 2017-ல் பெகாசஸ் மென்பொருளை வாங்கியது" என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் அந்தக் கட்டுரையில், "பாலஸ்தீனிய விவகாரத்தால் பல தசாப்தங்களாக இந்தியா - இஸ்ரேலிய உறவு உறைபனி போல் இருந்தது. ஆனால் மோடியின் இஸ்ரேலிய வருகைக்கு பின் இருநாட்டு உறவுகள் சுமுகமாக மாறின.இருநாடுகளும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தில் பெகாசஸ் உளவு மென்பொருள் மற்றும் ஏவுகணை மையப்புள்ளியாக இருந்தன.

சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்கள் மற்றும் உளவுத்துறை சாதனங்களின் தொகுப்பை விற்பனை செய்வதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.” என்பது உள்ளிட்ட தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

நாளை மறுநாள் பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், நியூயார்க் டைம்ஸின் இந்தக் கட்டுரையால் மீண்டும் பெகாசஸ் சர்ச்சை பூதாகரமாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, "நமது ஜனநாயகத்தின் முதன்மை நிறுவனங்கள், மாநிலத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக மோடி அரசாங்கம் பெகாசஸை வாங்கியுள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, ராணுவம், நீதித்துறை என அனைவரின் தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. இது தேசத் துரோகம். மோடி அரசு தேசத் துரோகத்தை செய்துள்ளது" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

banner

Related Stories

Related Stories