இந்தியா

உதவி செய்வதாக ATM-களில் திருடியே, கடனை அடைத்து புதிதாக வீடும் கட்டிய ‘பலே’ திருடன் - ஆந்திராவில் கைது!

முதியவர்களுக்கு உதவி செய்வதாகக் கூறி ஏ.டி.எம் மையங்களில் பணம் திருடி, அதன் மூலம் வீடு கட்டியவர் போலிஸில் சிக்கியுள்ளார்.

உதவி செய்வதாக ATM-களில் திருடியே, கடனை அடைத்து புதிதாக வீடும் கட்டிய ‘பலே’ திருடன் - ஆந்திராவில் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஆந்திராவில் முதியவர்களுக்கு உதவி செய்வதாக கூறி ஏ.டி.எம்மில் பணம் திருடி வந்தவரை போலிஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3.40 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் போலி ஏ.டி.எம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆந்திர மாநிலம் ஜம்மலமடுகு நகரில் போலிஸ் டிஎஸ்பி நாகராஜஷூ, டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வர்லு தலைமையிலான போலிஸார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு ஏ.டி.எம் மையங்களில் முதியவர்களை ஏமாற்றி பணம் திருடி வந்த கொள்ளையனை போலிஸார் கைது செய்தனர். கைதான கொள்ளையனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

சித்தூர் மாவட்டம் பெத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ரியாஸ் (43). இவர் மீது கடப்பா, சித்தூர், நெல்லூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மற்றும் கர்நாடக மாநிலத்தில் 56 வழக்குகள் உள்ளன.

இவர் ஏ.டி.எம் மையங்களுக்கு விவரம் தெரியாமல் வருபவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு பணம் எடுக்க உதவுதாகக் கூறி நூதன முறையில் ஏமாற்றி வந்துள்ளார்.

ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுத்து கொடுத்துவிட்டு, அதனை தன்னிடம் வைத்துக்கொண்டு போலி ஏ.டி.எம் கார்டுகளை அவர்களிடம் கொடுத்து வந்துள்ளார். அவர்கள் சென்றபிறகு பல்வேறு ஏ.டி.எம்களுக்கு சென்று பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறு மோசடி செய்து பெற்ற பணத்தின் மூலம் தனது கடன்களை அடைத்ததோடு மட்டுமல்லாமல், ரூ. 14 லட்சம் மதிப்பில் புதிதாக வீடும் கட்டியுள்ளார்.

இதையடுத்து அவரிடமிருந்து ரூ.3.40 லட்சம் ரொக்கப் பணம், பல வங்கிகளின் போலி ஏ.டி.எம் கார்டுகளை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories