இந்தியா

அடுத்த முப்படைத் தலைமை தளபதி யார்? - 7 நாட்களுக்குள் நியமிக்க பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலனை!

இந்தியாவின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக யார் வருவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அடுத்த முப்படைத் தலைமை தளபதி யார்? - 7 நாட்களுக்குள் நியமிக்க பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நீலகிரி விமானப்படை ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விழுந்து நொறுங்கிய விபத்தில் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார்.

இவ்விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டர் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கொள்கை குறித்து முடிவெடுக்கும் உயர்மட்ட அமைப்பான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு நேற்று மாலை கூடியது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறைந்த நேரமே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 11 அதிகாரிகளுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டுதான் ராணுவம், விமானப் படை, கப்பற்படை ஆகியவற்றின் மூன்று தளபதிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுகிற வகையில் முப்படைகளின் தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டது.

இராணுவ தளபதியாக இருந்து ஓய்வுபெற்ற பிபின் ராவத், நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதியாக 2020-ஆம் ஆண்டு ஜனவரி 20-ந் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து புதிய முப்படைகளின் தலைமை தளபதி அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் நியமிக்கப்பட இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த முப்படைத் தலைமை தளபதி யார்? - 7 நாட்களுக்குள் நியமிக்க பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலனை!

பிபின் ராவத் காலமானதையடுத்து, ராணுவ ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தற்போது நாட்டின் மூத்த இராணுவ அதிகாரியாகியுள்ளார். இராணுவ துணைத் தலைமை லெப்டினன்ட் ஜெனரல் சிபி மொஹந்தி மற்றும் வடக்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே.ஜோஷி ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.

சீனாவுடனான எல்லை மோதல் தொடர்ந்து நடந்துவரும் சூழலில் இந்தியாவின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக யார் வருவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories