இந்தியா

சிறுக சிறுக சேமித்த ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த முதியவர்: தேடிச் சென்று உதவிய ஸ்ரீநகர் போலிஸ் அதிகாரி!

முதியவரான கடலை வியாபாரியின் சேமிப்பு பணம் ஒரு லட்சம் ரூபாய் களவாடப்பட்டதால் வேதனையில் இருந்தவருக்கு ஸ்ரீநகர் காவல் துறை அதிகாரி உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுக சிறுக சேமித்த ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த முதியவர்:  தேடிச் சென்று உதவிய ஸ்ரீநகர் போலிஸ் அதிகாரி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜம்மு காஷ்மிரின் ஸ்ரீநகரில் உள்ள போரிகாடல் பகுதியைச் சேர்ந்தவர் 90 வயது முதியவரான அப்துல் ரஹ்மான். குடும்ப உறவுகள் எவரும் இல்லாததால் தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் போரிகாடல் பகுதியிலேயே கடலை உள்ளிட்ட நொறுக்குகளை விற்பனை செய்து வருகிறது.

அதில் வரும் வருமானத்தை வைத்து அன்றாட செலவினங்களை போக்கியதோடு தன்னுடைய இறுதிச் சடங்குக்காகவும் சிறுக சிறுக காசு சேமித்து வந்திருக்கிறார். இப்படியாக ஒரு லட்சம் ரூபாய் வரை சேமித்திருக்கிறார்.

இந்நிலையில், அண்மையில் அப்துல் ரஹ்மானின் சேமிப்பு பணமாக ரூ.1 லட்சம் திருடப்பட்டிருக்கிறது. இதனால் மனம் நொந்து வேதனையில் வாடியிருக்கிறார் முதியவர்.

இதனை அறிந்த ஸ்ரீநகர் காவல்துறை அதிகாரி சந்தீப் சவுத்ரி திருடர்களை கண்டுபிடிப்பதற்கு முன்பு நேரடியாக முதியவரிடம் சென்று அவருடைய சொந்த பணம் ஒரு லட்சத்தை கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய அவர், சில சமயங்களில் திருடர்களை கண்டுபிடிக்க தாமதமாக நேரிடும். அப்துல் ரஹ்மானின் வேதனை கண்டதும் அவரிடத்திற்கு சென்றேன். ஐபோனே ஒரு லட்சத்துக்கு மேல் வாங்குகிறோம். பணம் ஒரு பிரச்னை இல்லை. அதனால் அவருக்கு உதவ முன்வந்தேன் என சந்தீப் சவுத்ரி கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், வயது மூப்பு காரணமாக பணத்தை வேறு எங்காவது வைத்து விடுவோமோ என்ற அச்சத்தில் எப்போது அவருடனேயே வைத்திருப்பார் அப்துல் ரஹ்மான். அதன்படி ஒரு பாக்கெட்டில் ரூ.1 லட்சமும், இன்னொரு பாக்கெட்டில் 60 ஆயிரம் ரூபாயையும் வைத்திருந்திருக்கிறார்.

ஆகவே ஒரு பாக்கெட்டில் இருந்த ஒரு லட்ச ரூபாயை திருடர்கள் களவாடியிருக்கிறார்கள். இந்த நிகழ்வு வேதனையை அளிக்கிறது என்ற அவர், சந்தேகிக்கக் கூடிய சில திருடர்களின் புகைப்படங்களை முதியவரிடம் காண்பித்தோம். ஆனால் அவரால் அடையாளம் காட்ட முடியவில்லை. இருப்பினும் இந்த திருட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

காவல் அதிகாரி சந்தீப் சவுத்ரியின் இந்த செயல் இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவும் சந்தீப் சவுத்ரியின் செயலை பாராட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories