இந்தியா

“நீ பற்ற வைத்த நெருப்பொன்று” : தமிழ்நாட்டைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் பரவிய நீட் எதிர்ப்பு முழக்கம்!

தமிழ்நாட்டைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநில அரசும் நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.

“நீ பற்ற வைத்த நெருப்பொன்று” : தமிழ்நாட்டைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் பரவிய நீட் எதிர்ப்பு முழக்கம்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசும் நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தார்.

ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி, நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஆதாரப்பூர்வமாக தெரியவந்ததையடுத்து, நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரை அறிக்கை சமீபத்தில் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது. அதில், நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நீட் தேர்வின் குளறுபடிகள் விளக்கப்பட்டுள்ளன.

மேலும், நீட் தேர்வால் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களை புறக்கணித்தது, தனியார் பயிற்சியை அதிகம் ஊக்குவித்தது, பழங்குடி, தமிழ்வழி, கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்புகளை மறுக்கிறது என்கிற நீட் தேர்வை எதிர்ப்பதற்கான பல்வேறு காரணங்கள் தரவுகளின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளன. இந்த 165 பக்க அறிக்கை நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டைப் பின்பற்றி மகாராஷ்டிராவிலும் நீட் தேர்வு குறித்து முடிவெடுக்க வேண்டுமென மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா பட்டோல் வலியுறுத்தினார்.

நீட் தேர்வு சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாகவும், கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், மகாராஷ்டிராவிலும் நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் அமித் தேஷ்முக், பேசுகையில், “தமிழ்நாடு நீட் தேர்வை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் விளைவாக, நீட் தேர்வு மாநிலங்களுக்கு சரியானதா, மாணவர்களின் நலனுக்கு சிறந்ததா என விவாதங்கள் எழுந்துள்ளன.

நீட் தேர்வில் வெற்றிபெறும் சி.பி.எஸ்.இ மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேள்வித்தாள்களும் கசிந்து வருகின்றன. தேர்வில் பங்கேற்கும் போலி மாணவர்கள் குறித்தும் தகவல்கள் வந்துள்ளன. நீட் தேர்வு மாணவர்களுக்கு நன்மையா தீமையா என்பது குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories