இந்தியா

போர்வெல் குழிக்குள் குழந்தை.. திக்திக் நிமிடங்கள்.. 24 மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிரிழந்த சோகம்!

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை 24 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போர்வெல் குழிக்குள் குழந்தை.. திக்திக் நிமிடங்கள்.. 24 மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிரிழந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஆலக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தப்பா ஹசாரே. இவரது இரண்டரை வயது ஆண் குழந்தை சரத். சித்தப்பா ஹசாரே தனது குடும்பத்தினருடன் தோட்டத்து வீட்டில் வசித்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பு நின்று விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சரத் திடீரென மாயமாகியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அருகேயுள்ள பகுதிகளில் தேடிப்பார்த்தனர்.

எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் குழந்தையை யாரோ கடத்தி சென்றதாக, ஹாருகேரி காவல் நிலையத்தில் சித்தப்பா புகார் அளித்தார். புகாரின்பேரில் குழந்தை சரத்தை போலிஸாரும் தேடிவந்தனர்.

இந்நிலையில் அவர்களது வீட்டிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் ஆழ்துளை கிணற்றுக்குள் 15 அடி ஆழத்தில் குழந்தை சரத் விழுந்து கிடந்தது தெரியவந்தது. குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை அறிந்து பெற்றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து போலிஸாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்து 24 மணி நேரமானதால் தண்ணீர், உணவு இன்றி குழந்தை மிகவும் சோர்வாக இருந்துள்ளான். மேலும் குழந்தையின் அழுகுரலும் கேட்காததால் பெற்றோர் அச்சமடைந்தனர். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வந்தது.

24 மணி நேரம் கடந்த நிலையில் ஆக்சிஜன் கிடைக்காமலும், தண்ணீர் மற்றும் உணவு இன்றியும் உடல்நிலை பாதிக்கப்பட்டு குழந்தை சரத் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக தெரியவந்தது. குழந்தையின் உடலை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஆழ்துளை கிணற்றை தோண்டியது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் கர்நாடகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories