இந்தியா

"இஸ்லாமியர்கள் கொல்லப்படுவார்கள்.." : பா.ஜ.க போராட்டத்தில் எழுந்த கோஷத்தால் பரபரப்பு!

டெல்லி நாடாளுமன்றம் அருகே பா.ஜ.க நடத்திய போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"இஸ்லாமியர்கள் கொல்லப்படுவார்கள்.." : பா.ஜ.க போராட்டத்தில் எழுந்த கோஷத்தால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் நாடாளுமன்றம் அருகே பா.ஜ.கவினர் நடத்திய போராட்டத்தில், "ராம், ராம்" கோஷங்களுடன் இஸ்லாமியர்கள் கொல்லப்படுவார்கள் என கோஷங்கள் எழுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோஷம் தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லி பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் அஷ்வனி உபாத்யாய் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில்தான் இஸ்லாமியர்கள் கொல்லப்படுவார்கள் என கோஷம் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் வசிப்பதற்கு "ஜெய் ஸ்ரீ ராம்" என்று சொல்ல வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் ஆவேசமாக கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து அஷ்வனி உபாத்யாய், "இந்த கோஷங்கள் எழுந்தபோது நான் அங்கு இல்லை. நான் இவர்களை அழைக்கவில்லை. நான் அங்கிருந்து சென்ற பிறகே இது நடந்திருக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து, வைரலாகி வரும் வீடியோவில் இருப்பவர்களை அடையாளம் காண முயற்சித்து வருவதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட கோஷம் குறித்து அசாதுதீன் ஓவைசி, "பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகிலேயே இஸ்லாமியர்களுக்கு எதிராக "இனப்படுகொலை முழக்கங்கள்" எழுப்பப்பட்டுள்ளன. இந்த குண்டர்களின் தைரியத்திற்கான ரகசியம் என்ன? மோடி அரசு அவர்களுடன் நிற்கிறது என்பதுதான்.

ஜூலை 24 அன்று, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு டெல்லி காவல்துறைக்கு யாரையும் தடுத்து நிறுத்தும் உரிமையை வழங்கியது. ஆனாலும் டெல்லி காவல்துறை அமைதியாக அந்தக் காட்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories