இந்தியா

"சிவசேனா அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்குவோம்": பா.ஜ.க தலைவரின் பேச்சால் மகாராஷ்டிராவில் சர்ச்சை!

சிவசேனா அலுவலகத்தை இடித்துத் தரைமட்டமாக்குவோம் என பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"சிவசேனா அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்குவோம்": பா.ஜ.க தலைவரின் பேச்சால் மகாராஷ்டிராவில் சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது பா.ஜ.கவுடன் இருந்த நட்பை சிவசேனா முறித்துக்கொண்டது. பிறகு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது சிவசேனா.

இந்தத் தேர்தலில் நட்பு முறிந்ததை அடுத்து சிவசேனா தொடர்ச்சியாக பா.ஜ.கவை விமர்சித்து வருகிறது. வேளாண் சட்டம் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கை வரை ஒன்றிய அரசை கடுமையாக தாக்கி பேசி வருகிறார் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே. இதனால் சிவசேனா மீது பா.ஜ.க கடும் கோபத்தில் உள்ளது.

இந்நிலையில், பா.ஜ.கவின் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பிரசாத் லாட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசும்போது, "நாங்கள் இங்கு வரும்போதெல்லாம், போலிஸ் படை நிறுத்தப்படுகிறது. அவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். நாங்கள் சிவசேனா பவனை இடிப்போம் என அவர்கள் நினைக்கிறார்கள். நேரம் வந்தால் நாங்கள் அதைச் செய்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.

"சிவசேனா அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்குவோம்": பா.ஜ.க தலைவரின் பேச்சால் மகாராஷ்டிராவில் சர்ச்சை!

பிரசாத் லாட்டின் இந்தப் பேச்சு மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலைக் கிளம்பியுள்ளது. மேலும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இவரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகையில், "பா.ஜ.கவின் இதுபோன்ற மிரட்டல்களைச் சகித்துக்கொள்ள மாட்டோம். உரிய பதிலடி கொடுப்போம். மீண்டும் எழமுடியாத அளவுக்கு தங்களுடைய அடி வலுவானதாக இருக்கும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து பிரசாத் கெலாட், தனது கருத்துகளை திரும்பப் பெற்றுக்கொண்டதுடன் வருத்தம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா அரசியலில் சிவசேனா, பா.ஜ.க இடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.

banner

Related Stories

Related Stories