இந்தியா

"அமைச்சர்களின் எண்ணிக்கைதான் அதிகரித்துள்ளது.. தடுப்பூசிகள் அல்ல" : ராகுல்காந்தி கிண்டல்!

அமைச்சர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது, தடுப்பூசிகள் எண்ணிக்கை அல்ல என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

"அமைச்சர்களின் எண்ணிக்கைதான் அதிகரித்துள்ளது.. தடுப்பூசிகள் அல்ல" : ராகுல்காந்தி  கிண்டல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பேரழிவை ஏற்படுத்தியதை அடுத்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டு தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தடுப்பூசிகளை அதிகமாகக் கொள்முதல் செய்யாததால் பல மாநிலங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா மூன்றாவது அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என மருத்துவர்களும், உலக சுகாதார அமைப்பினரும் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் ஒன்றிய அரசு இந்த வருடத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என தெரிவித்து வருகிறது. ஆனால் பல மாநிலங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எப்படி இந்த வருடத்திற்குள் தடுப்பூசி செலுத்த முடியும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இப்படி நாடே கொரோனா நெருக்கடியில் சிக்கி இருக்கும் நிலையில், ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்போது அமைச்சரவை விரிவாக்கம்தான் முக்கியமா என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ஒன்றிய அமைச்சர்களின் எண்ணிக்கைதான் அதிகரித்துள்ளது, தடுப்பூசி எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி ஒன்றிய அரசை சாடியுள்ளார்.

இதுகுறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டரில், "அமைச்சர்கள் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறது, தடுப்பூசி அதிகரிக்கவில்லை” எனப் பதிவிட்டு #WhereAreVaccines என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தியுள்ளார். மேலும், தடுப்பூசி குறித்த வரைபடம் ஒன்றையும் தனது ட்விட்டரில் இணைத்துள்ளார்.

அதில், "டிசம்பர் மாதத்துக்குள் நாட்டில் 60 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இதற்கு நாள்தோறும் 88 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த 7 நாட்களாக சராசரியாக நாள்தோறும் 34 லட்சம் தடுப்பூசிகள்தான் செலுத்தப்படுகின்றன, தினமும் ஏறக்குறைய 54 லட்சம் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக இருக்கின்றன. கடந்த சனிக்கிழமை 37 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன, 51 லட்சம் தடுப்பூசி பற்றாக்குறையாகச் செலுத்தப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories