இந்தியா

"பிரதமரின் அழுகை உயிர்களைக் காப்பாற்றவில்லை.. ஆனால் ஆக்சிஜன் காப்பாற்றியிருக்கும்" - ராகுல் காந்தி சாடல்!

மூன்றாவது அலையை எதிர்கொள்ள ஒன்றிய அரசு தயாராக இருக்க வேண்டும் என ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"பிரதமரின் அழுகை உயிர்களைக் காப்பாற்றவில்லை.. ஆனால் ஆக்சிஜன் காப்பாற்றியிருக்கும்" - ராகுல் காந்தி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை ஒன்றிய அரசு சரியாகக் கையாளாததால் நாடு பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது. மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோர்களை இழந்து வீதிக்கு வந்துள்ளன.

இப்படி நாடே கொரோனாவின் பிடியில் சிக்கிக் தவித்து வருகிறது. இதற்குக் காரணம் ஒன்றிய அரசின் தவறான முடிவுகளே என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்த வெள்ளையறிக்கை ஒன்றை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டு, காணொலி மூலம் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஒன்றிய அரசைக் குறை சொல்வதற்காக இந்த வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள ஒன்றிய அரசிற்கு உதவுவதற்காகவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் இறந்தவர்களில் 90% பேரை காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. பிரதமரின் கண்ணீரால் குடும்பங்களின் கண்ணீரைத் துடைக்க முடியாது. அவருடைய கண்ணீரால் அவர்களை காப்பாற்ற முடியாது. ஆக்சிஜன் மட்டுமே அவர்களைக் காப்பாற்றியிருக்கும். அப்போது அவர் மேற்குவங்க தேர்தலில் கவனம் செலுத்தியதால் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

கொரோனா தொற்றால் வருமானத்தை இழந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முடியாது என ஒன்றிய அரசு சொல்கிறது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ரூபாய் 4 லட்சம் கோடி வரை வருவாய் ஈட்டியுள்ளது.

தற்போது, மூன்றாவது அலை வருவதை முழு நாடுமே அறிந்துள்ளது. எனவே இதை எதிர்கொள்ள ஒன்றிய அரசு தயாராக இருக்க வேண்டும். மருத்துவமனைகள், ஆக்சிஜன் படுக்கைகளை தயார்படுத்த வேண்டும்" என்றார்.

banner

Related Stories

Related Stories