இந்தியா

“தமிழக வங்கி வணிகப் பண்பாட்டின் அடையாளமான ‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கி’யை தனியாருக்கு விற்பதா?” : கி.வீரமணி

“தமிழக வங்கி வணிகப் பண்பாட்டின் அடையாளமான ‘‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கி’’யை தனியாருக்கு விற்பதா?” என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஒன்றிய அரசை சாடியுள்ளார்.

“தமிழக வங்கி வணிகப் பண்பாட்டின் அடையாளமான ‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கி’யை தனியாருக்கு விற்பதா?” : கி.வீரமணி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக வங்கி வணிகப் பண்பாட்டின் அடையாளமான ‘‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கி’’யை தனியாருக்கு விற்பதா? ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆவன செய்யவேண்டும் என்றும், முற்போக்குச் சமதர்ம சிந்தனையாளர்கள் - சமூகநீதிப் போராளிகள் இதை வெறும் வங்கி ஊழியர்கள் பிரச்சினையாகப் பார்க்காமல் சமூகநீதிப் போரில், ஒன்றிய அரசின் சூழ்ச்சி வியூகத் திரையையும் கிழிக்கவேண்டியது அவசியம் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “2020-2021 ஆம் நிதியாண்டின் நிறைவுக் காலாண்டின் (ஜனவரி 21 - மார்ச் 21) தணிக்கை செய்யப்பட்ட செயல்பாட்டு விவரங்களை பொதுத்துறை வங்கிகள் வெளியிடத் தொடங்கியுள்ள சூழலில் தனியார் வசம் ஒப்படைக்கவேண்டிய பொதுத்துறை வங்கிகள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. ஒன்றிய அரசின் தனியார்மயமாக்க முதல் கட்டப் பணியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பெயரும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட காலாண்டு அறிக்கையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடந்த காலாண்டுகளில் ஈட்டிய லாபத்தை விட இரண்டு மடங்கு லாபத்தை ஈட்டியுள்ளது. செயல்பாட்டு நிலைமைகள் மேலோங்கி வரும் நிலையில் (அதற்கு தக்க தண்டனைதான் போலும் இப்படி ஓர் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு) தனியார் வசம் ஒப்படைக்க வேண்டியதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியையும் சேர்த்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகவே கருத முடியும்.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக, அதிக எண்ணிக்கையிலான கிளைகளுடன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேவையாற்றி வருகிறது. அதன் காரணமாகவே தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் மாநிலத்தில் உள்ள வங்கிகளானவை அரசுத் திட்டங்களை நடைமுறைப்படுத்திடும் குழுவின் (State Level Bankers’ Committee) ஒருங்கிணைப்பாளராக, தமிழக அரசுடன் நேரடித் தொடர்பில் உள்ள வங்கி என்ற பொறுப்பினையும் ஏற்று செயல்பட்டு வருகிறது.

2000 ஆம் ஆண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியினை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைத்திட முயற்சிகள் நடைபெற்றன. அப்பொழுது நாம் மலேசிய நாட்டுப் பயணத்தில் இருந்த நிலையில், அன்றைய தமிழக முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைத் தொடர்பு கொண்டு இணைப்பு முயற்சியினை முறியடித்திட வேண்டினோம். பொது அறிக்கையாகவும் வெளியிட்டோம். அப்பொழுது எடுக்கப்பட்ட முயற்சிகளின் காரணமாக அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசு இணைப்பு முயற்சியினைக் கைவிட்டது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தனித்தன்மை, அடையாளம் கட்டிக்காக்கப்பட்டது.

“தமிழக வங்கி வணிகப் பண்பாட்டின் அடையாளமான ‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கி’யை தனியாருக்கு விற்பதா?” : கி.வீரமணி

தமிழ்நாட்டில் 1937 ஆம் ஆண்டு நகரத்தார் சமுதாய பெருமக்களால் மலேயா மற்றும் கீழை நாடுகளுடனான வணிகத்திற்கும், உள்நாட்டு வணிகத்திற்கும், தமிழக மக்களுக்கும், பிற மாநிலத்தாருக்கும் சேவைகளை வழங்கிட தொடங்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது. நாட்டுடைமை வங்கி, பொதுத்துறை வங்கி என்ற உரிமை - நிர்வாக மாற்றம் பெற்ற நிலையிலும் சிறப்பாகத் தனித்தன்மையுடன் சேவை ஆற்றி வருகிறது. தமிழ்நாட்டின் பாரம்பரிய வங்கிப் பண்பாட்டுடன் இன்றளவும் அதன் அடையாளமாகத் திகழ்ந்து வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதே அடையாளத்துடன் ஒன்றிய அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் தொடர்ந்து பொதுத்துறை வங்கியாக செயல்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் தனித்தன்மைகளைச் சிறப்புகளைக் கட்டிக் காப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் முன்பு எடுத்த முயற்சியினைப் போலவே இப்பொழுதும் மேற்கொண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனியாருக்கு ‘‘தாரை வார்க்கப்படுவதை’’ தடுத்து நிறுத்திட வேண்டுமெனக் கேட்டுகொள்கிறோம்.

நாட்டின் அந்தந்த பகுதி சார்ந்த பெயர்களுடன் பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வரும் நிலையில், நாடு தழுவிய பெயரான ‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கி’ என்பதைத் தாங்கி, ஒன்றிய அரசின், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைப்படி லாபகரமாக வருமானம் ஈட்டி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொதுத்துறை வங்கியாகவே அதே பெயருடன் செயல்பட வேண்டும். சற்றும் தாமதிக்காமல் தமிழ்நாடு முதலமைச்சர் இது குறித்து பிரதமர் அவர்களைத் தொடர்பு கொண்டு ஆவன செய்யவேண்டுமென தமிழ்நாட்டு நலனை, தமிழ்நாட்டின் தனித்துவ அடையாளத்தினை காப்பாற்றிட கேட்டுக் கொள்கிறோம்.

கருப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் - எல்லா குடிமக்களுக்கும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்ற பிரதமர் - 2014 ஆம் ஆண்டு பதவிக்கு வருமுன் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நீர்மேல் எழுதிய எழுத்துக்களாயின.

லாபத்தில் இயங்கும் தேசிய வங்கிகளையேகூட இப்போது தனியாருக்கு விற்கும் ஏற்பாடுகள் மும்முரமாக அரங்கேறி வருகின்றன.

முன்பே பல விமான நிலையங்கள் தனியாருக்கு, அதானி போன்றவர்களுக்கு விற்கப்பட்டு விட்டன. பெரும் விளையாட்டு மைதானங்களைக்கூட விற்கும் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

பொதுத் துறை நிறுவனங்களான வங்கிகளில் சமூகநீதி - இட ஒதுக்கீட்டின்படியான உரிமைகள் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையோருக்குக் கிடைக்காது; மீண்டும் உயர்ஜாதிகளின் ஏகபோகத்தின்கீழே - ‘பழைய கருப்பண்ணன்’ முறையில் - நாட்டுடைமைக்கு முன் இருந்ததைப் போன்ற ஆதிக்கப் போக்கே தலைதூக்கும். மண்டல் பரிந்துரைகள்படி இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம், ஏற்கெனவே எஸ்.சி., எஸ்.டி,க்கு இருந்த 22.5 சதவிகிதம் எல்லாம் ஒரே நொடியில் பறிக்கப்படும் ஏற்பாட்டின் மற்றொரு நோக்கமே இதுவாகும்!

எனவே, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் - இதுதான் ஒன்றிய பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அரசின் சூழ்ச்சித் திட்டமாகும்!

நாடு தழுவிய அளவில் முற்போக்குச் சமதர்ம சிந்தனையாளர்கள் - சமூகநீதிப் போராளிகள் இதை வெறும் வங்கி ஊழியர்கள் பிரச்சினையாகப் பார்க்காமல், சமூகநீதிப் போரில், ஒன்றிய அரசின் சூழ்ச்சி வியூகத் திரையையும் கிழிக்கவேண்டியது அவசியமாகும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories