இந்தியா

“கோவிஷீல்டு தடுப்பூசி 2 டோஸ்களுக்கான இடைவெளி ஏன் அதிகரிக்கப்பட்டது?” - டாக்டர் என்.கே.அரோரா விளக்கம்!

கோவிஷீல்டு 2 டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்கும் முடிவு அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

“கோவிஷீல்டு தடுப்பூசி 2 டோஸ்களுக்கான இடைவெளி ஏன் அதிகரிக்கப்பட்டது?” - டாக்டர் என்.கே.அரோரா விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கோவிஷீல்டு 2 டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்கும் முடிவு அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கோவிட்-19 பணிக்குழு தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கோவிட்19 தடுப்பூசித் திட்டம் குறித்து, தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கோவிட்19 பணிக்குழு தலைவர் என்.கே.அரோரா பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “கடந்த ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தரவுகளின்படி, அடினோவெக்டர் கோவிட் தடுப்பூசிகளின் இரு டோஸ்களுக்கான இடைவெளி 12 வாரங்களாக இருக்கும்போது அவற்றின் செயல்திறன் 65% - 88% வரை வேறுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆல்பா வகைத் தொற்றிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கு இதுவே அடிப்படையாக அமைந்தது.

இந்த 12 வாரங்கள் இடைவெளியை அவர்கள் பின்பற்றியதால் இங்கிலாந்தினால் தொற்றிலிருந்து மீள முடிந்தது. இடைவெளி அதிகரிக்கும்போது அடினோவெக்டர் தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுவதற்கான அடிப்படை அறிவியல் காரணங்கள் இருப்பதால் இது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும் என்று நாங்களும் கருதினோம்.

எனவே, கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை 4 - 6 வாரங்களில் இருந்து 12 - 16 வாரங்களாக அதிகரிக்க மே 13ம் தேதி முடிவு செய்தோம். அனைவராலும் சரியாக 12 வாரங்களில் மீண்டும் வர இயலாததால், இதன் மூலம் நெகிழ்வுத்தன்மையும் அளிக்கப்படுகிறது. அறிவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

அறிவியலை அடிப்படையாகக் கொண்டு முடிவுகள் மேற்கொள்ளப்படும் வகையில் வெளிப்படைத் தன்மையிலான முறையை நாம் கொண்டுள்ளோம். கோவிட் பணிக்குழு அந்த முடிவை எடுத்தபோது, எதிர்ப்புக் குரல்கள் எதுவுமே இல்லை. தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் இந்த விஷயம் குறித்து விவாதித்தபோது அங்கும் எதிர்ப்புகள் எழவில்லை.

இதையடுத்தே, தடுப்பூசிகளுக்கான இடைவெளியை 12 - 16 வாரங்களாக மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. முன்னதாக நான்கு வார இடைவெளி என்ற முடிவு, அப்போது கைவசம் இருந்த சோதனைத் தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories