இந்தியா

கொரோனா தடுப்பூசிக்கு 5% GST தொடரும்... மாநிலங்களை ஏமாற்றிய ஒன்றிய அரசின் அறிவிப்பு!

கருப்பு பூஞ்சை தொற்றுக்குப் பயன்படுத்தும் மருந்துக்கான ஜி.எஸ்.டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கு 5% GST தொடரும்... மாநிலங்களை ஏமாற்றிய ஒன்றிய அரசின் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து, தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான வரியால் மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை அதிகரித்துள்ளது.

இதையடுத்து ஒன்றிய அரசிடம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் மருத்துவ உபகரணங்கள் மீதான வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தினர்.

பின்னர், மே 28ம் தேதி 44 ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில நிதியமைச்சர்கள், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் மீதான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 44வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர்/வணிகவரி ஆணையர் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இன்றைய கூட்டத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர், கோவிட் பெருந்தொற்று தொடர்பான மருந்துகள் மற்றும் கருவிகள் மீது குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய விகித வரி தான் நிர்ணயிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்றும், இந்நேர்வில் அமைச்சர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரை ஏற்புடையதாக இல்லை என்றும் இவற்றின் மீது பூஜ்ய விகிதம் அல்லது 0.1 சதவிகிதம் வரி தான் விதித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன் கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் மருந்துக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய நிதியமைச்சரின் இந்த அறிவிப்பில், கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜி.எஸ்.டி இல்லை. கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து மீதான ஜி.எஸ்.டி வரி 12%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் கொரோனா சிகிச்சைக்கான Tocilzumab மருந்துக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மருத்துவ ஆக்சிஜனுக்கான ஜி.எஸ்.டி 12%-ல் இருந்து 5% ஆகவும், சானிடைசர், வெப்பநிலை பரிசோதனை கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டருக்கான ஜி.எஸ்.டி வரியும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வென்டிலேட்டர், கொரோனா பரிசோதனைக் கருவிகளுக்கான வரி 12%-ல் இருந்து 5% ஆகவும், ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான ஜி.எஸ்.டி வரி 12%-ல் இருந்து 5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தடுப்பூசிகள் மீதான 5% வரி தொடரும் என ஒன்றிய நிதியமைச்சரின அறிவிப்பு மாநில அரசுகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது. மேலும் 75% ஒன்றிய அரசே வாங்கும். அதன் ஜி.எஸ்.டி வரியை செலுத்தும். ஜி.எஸ்.டியில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் 70% மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories