இந்தியா

“நந்திகிராம் தொகுதி தேர்தல் அதிகாரியின் உயிருக்கு ஆபத்து!?” - மம்தா பானர்ஜி ‘பகீர்’ குற்றச்சாட்டு!

நந்திகிராமில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என நந்திகிராம் தொகுதி தேர்தல் அதிகாரி யாருக்கோ கடிதம் எழுதியதாக மம்தா பானர்ஜி பகிரங்க குற்றச்சாட்டு.

“நந்திகிராம் தொகுதி தேர்தல் அதிகாரியின் உயிருக்கு ஆபத்து!?” - மம்தா பானர்ஜி ‘பகீர்’ குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நந்திகிராமில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என நந்திகிராம் தொகுதி தேர்தல் அதிகாரி யாருக்கோ கடிதம் எழுதியதாக மம்தா பானர்ஜி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மேற்கு வங்கத்தில் 217 தொகுதிகளை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. ஆனால், முதலமைச்சர் வேட்பாளரான மம்தா பானர்ஜி தான் பேட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்த்து, சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்த சுவேந்து அதிகாரி போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே மம்தா பானர்ஜியும் பா.ஜ.கவின் சுவேந்து அதிகாரியும் மாறிமாறி முன்னிலை பெற்றுவந்தனர்.

மாலையில் மம்தா பானர்ஜி 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தகவல் வெளியானது. பின்னர், சுவேந்து அதிகாரி 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நந்திகிராம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் அதிகாரி கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில், நந்திகிராம் வாக்கு எண்ணிக்கை விவகாரம் தொடர்பாக இன்று பேசிய மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அத்தொகுதியின் தேர்தல் அதிகாரி யாருக்கோ கடிதம் எழுதியதாக தனக்கு குறுஞ்செய்தி வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேற்கு வங்க முதல்வரின் தொகுதியில் தேர்தல் அதிகாரிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முதல்வரே குற்றம்சாட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories