
கரக்பூர் ஐ.ஐ.டி பேராசிரியை ஒருவர், எழுந்து நிற்காத மாணவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, ஆன்லைன் வகுப்பில் இருந்து வெளியேற்றிய காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
கரக்பூர் தொழில்நுட்பக் கழகத்தில், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஓராண்டு துவக்க நிலை பயிற்சிக்கான ஆன்லைன் வகுப்பு நடந்தது. இதில் சுமார் 100 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஆன்லைன் வகுப்பில் பாடம் துவங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட்போது எழுந்து நிற்காத மாணவர்களை தகாத வார்த்தைகளால் இழிவாகத் திட்டியுள்ளார் ஐ.ஐ.டி கரக்பூர் பேராசிரியை சீமா.
“குறைந்தபட்சம் இந்த நாட்டிற்காக நீங்கள் செய்யக்கூடியது, தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்துவதுதான். அதைக் கூடச் செய்யாமல், இந்தியன் என சொல்லிக்கொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” எனக் கேட்டுள்ளார்.
மேலும், மாணவர்களை “பாரத் மாதா கி ஜெய்” என்று உச்சரிக்குமாறு வற்புறுத்தி, தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத மாணவர்களை வகுப்பில் இருந்து வெளியேற்றி உள்ளார்.
தொடர்ந்து, “என் மீது சிறுபான்மையினர் நலத்துறை, கல்வி அமைச்சகம் உட்பட எங்கு வேண்டுமென்றாலும் புகார் கொடுங்கள்; கவலையில்லை” எனக் கூறியுள்ளார்.
பேராரிசியை சீமா மாணவர்களை இழிவாகப் பேசுவது குறித்த வீடியோ மாணவர்களால் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
ஐ.ஐ.டி பேராசிரியை தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களை அவமதித்ததற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இச்சம்பவம் குறித்து விசாரிக்க கரக்பூர் ஐ.ஐ.டி நிர்வாகம் விசாரணை குழுவை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.








