இந்தியா

“இந்தியாவில் சுகாதார அவசரநிலை.. என் ஆலோசனைகளைக் கேளுங்கள்” - மோடி அரசை எச்சரித்து மன்மோகன் சிங் கடிதம்!

தடுப்பூசி செலுத்துவதில் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான ஆலோசனைகளைக் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

“இந்தியாவில் சுகாதார அவசரநிலை.. என் ஆலோசனைகளைக் கேளுங்கள்” - மோடி அரசை எச்சரித்து மன்மோகன் சிங் கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து தினந்தோறும் 2 லட்சத்துக்கும் மேல் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. கொரோனாவை தடுக்க இந்தியாவில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே பல மாநிலங்களில் தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், உடனடியாக குறிப்பிட்ட தடுப்பூசிகளை வழங்குமாறும் பல மாநில முதல்வர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், மத்திய பா.ஜ.க அரசு தடுப்பூசி பற்றாக்குறை இல்லை எனக் கூறி வருகிறது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்துவதில் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான ஆலோசனைகளைக் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமரும், பொருளாதார அறிஞருமான மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “கொரோனா தொற்றால், இந்தியாவும் உலக நாடுகளும் ஓராண்டாக தத்தளித்து வருகின்றன. பெரும்பாலானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வறுமையில் தள்ளப்பட்டு உள்ளனர். தற்போது இரண்டாவது அலை வீச துவங்கும் சூழ்நிலையில், பெரும்பாலான மக்கள், எப்போது தங்களது வாழ்வாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

பெருந்தோற்றை எதிர்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. அதில், தடுப்பூசி போடுவது முக்கியமானது. இது தொடர்பாக எனது ஆலோசனைகளை வழங்கி உள்ளேன். அதன்படி,

1. அடுத்த 6 மாதங்களில், தடுப்பு மருந்து உற்பத்திக்காக அனுமதி கொடுக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் விநியோகிக்க உரிமம் பெற்ற நிறுவனங்கள் குறித்து அரசு அறிவிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்தால், அதற்கு முன்னதாக தேவையான அளவு தடுப்பு மருந்து கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

2. தடுப்பு மருந்துகளை அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிப்பது தொடர்பாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அவசர காலத்தில் விநியோகம் செய்வதற்கு 10 சதவீத மருந்துகளை மத்திய அரசு தன் வசம் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

3. முன்களப் பணியாளர்கள் யார் என்பதை வரையறுக்க வேண்டும். அவர்கள் 45 வயதுக்கு கீழ் இருந்தாலும் தடுப்பூசி போடுவதற்கும் மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

4. கடந்த பல ஆண்டுகளாக, உலகளவில் மிகப்பெரிய தடுப்பு மருந்து உற்பத்தியாளராக இந்தியா திகழ்ந்தது. இதற்கு அரசின் கொள்கையும், பாதுகாக்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமையுமே காரணம். சுகாதார அவசர நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தியை விரைவாக அதிகரிக்கவும் தேவையான நிதி மற்றும் சலுகைகளை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும்.

மேலும், சட்டத்தில் உள்ள கட்டாய லைசென்ஸ் முறையை அமல்படுத்த வேண்டும். கொரோனா கவலைக்குரியதாக உள்ளநிலையில், கட்டாய லைசென்ஸ் முறையை இஸ்ரேல் அமல்படுத்தி உள்ளது. இந்தியாவில், அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தை இந்தியா விரைவாக கடைபிடிக்க வேண்டும்.

5. இந்தியாவில், உள்நாட்டு மருந்து குறைவாக உள்ளதால், ஐரோப்பா அல்லது அமெரிக்க மருத்துவ அமைப்புகள் ஒப்புதல் வழங்கிய மருந்துகளை , நமது நாட்டில் எந்தவித தடையும் இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். நாம், கணிக்க முடியாத அவசர நிலையை எதிர்கொண்டு வருகிறோம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம்.

தற்போது, இந்தியாவில் குறைந்தளவு பேருக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. சரியான கொள்கை திட்டமிடலுடன், சிறப்பாகவும் விரைவாகவும் நம்மால் செயல்பட முடியும் என நம்புகிறேன். இந்த ஆலோசனைகளை மத்திய அரசு ஏற்று கொள்ளும் என்றும், அதற்கு ஏற்றவாறு செயல்படும் எனவும் நம்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories