இந்தியா

மேகதாதுவில் கட்டுமான பணிகளை தொடங்கிய கர்நாடக பாஜக அரசு? சொட்டுநீர் கூட கிடைக்காது என விவசாயிகள் வேதனை!

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை கர்நாடக பாஜக அரசு தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகதாதுவில் கட்டுமான பணிகளை தொடங்கிய கர்நாடக பாஜக அரசு? சொட்டுநீர் கூட கிடைக்காது என  விவசாயிகள் வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக பா.ஜ.க. அரசு காவிரியில் மேகதாது அணைக்கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது தமிழக விவசாயிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு ஆரம்பக் கட்டப் பணிகள்தொடங்கப்பட்டுவிட்டன என்று நேரில் சென்று பார்வையிட்ட தமிழக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர் என்று "தி டைம்ஸ் ஆஃப்இந்தியா" ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து "தி டைம்ஸ் ஆஃப்இந்தியா" ஆங்கில நாளேட்டின் நேற்றைய (15.4.2021) இதழில் வெளியிடப்பட்டுள்ள சிறப்புச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக எல்லையில் அணைக் கட்டும் பணி!

தமிழக டெல்டா பகுதிக்கு காவிரி நீர் கிடைக்க விடாமல் செய்கிற அளவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மேகதாது அணையைக் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கர்நாடக மாநில ரிசர்வ் வனப்பகுதியில் உள்ள இடத்துக்கு அருகில், கர்நாடக - தமிழக எல்லைப் பகுதியில் சில கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அணைக்கட்டுத் திட்டத்துக்கு ஏற்கனவே இரண்டு முறை, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அந்தத் திட்டத்திற்கு அனுமதி அளிப்பதை ஒத்தி வைத்திருந்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் குழு ஒன்று, அணை கட்டுவதற்கு கர்நாடக அரசால் ஒத்திவைக்கப்பட்டுள்ள இடத்தை ரிசர்வ் வனப்பகுதிக்கு செல்வதுபோல் சென்று பார்வையிட்டுள்ளது. அக்குழுவினர் கர்நாடக மாநில பா.ஜ.க. அரசு மேகதாதுவில் காவிரியின் குறுக்கே மேலும் ஒரு அணையைக் கட்டுவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளைத் தொடங்கிவிட்டது என்று கூறியுள்ளனர்.

மேகதாதுவில் கட்டுமான பணிகளை தொடங்கிய கர்நாடக பாஜக அரசு? சொட்டுநீர் கூட கிடைக்காது என  விவசாயிகள் வேதனை!

கட்டுமானப்பொருள்கள் குவிப்பு!

அப்பகுதியில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் கட்டுமானத்திற்குத் தேவையான பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. எனவே, காவிரி நீர்மேம்பாட்டு ஆணையம் உடனடியாக தலையிட்டு அந்தப் பணிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடக அரசு அந்த அணையைக் கட்டுவதற்கு மிக அதிக அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது" என்று தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார். இவருடைய தலைமையில்தான் தமிழக விவசாயிகள் குழு அந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டு வந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை!

அந்தக் குழுவில் உள்ளூர் விவசாயிகளும் இடம் பெற்றிருந்தனர். இக்குழுவினர் திங்கட்கிழமையன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளது. உள்ளூர் மக்களும் அந்தத் திட்டம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். 67 டி.எம்.சி. கொள்ளளவுடன் கட்டப்படும் அந்த அணையால் தங்கள் வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்பதால் இடமாற்றம் செய்யப்படும் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் அவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

"அந்த அணையைக் கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு இன்னமும் அனுமதி எதுவும் பெறவில்லை. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில்உள்ளது. நாங்கள் நடைபெறும் பணிகள் குறித்து கணிக்கவிருக்கிறோம். கீழ்ப் பாசனப் பகுதியில் உள்ள மாநில மக்களின் நலனுக்கு எதிராக அவர்கள் செயல்பட முடியாது" என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஒரு சொட்டுநீர்கூட கிடைக்காது!

இந்த மேகதாது அணை ரூ.9,000 கோடி செலவில் கட்டப்படவிருப்பதாக கர்நாடக மாநிலஅரசின் "காவிரி நீராவிரி நிசமா நியாயமிதா"" அமைப்பு மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகத்திற்கு 2019-ல் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணை பெங்களூரு மெட்ரோ பாலிடன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காகக் கட்டப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குத் தேவையான இடம் 5,352 ஏக்கர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 4,986 ஏக்கர் நீர்ப் பிடிப்புப் பகுதியில் இருக்கும். அதில் காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதிகளைச் சேர்ந்த 3,181 ஏக்கர் மற்றும் ரிசர்வ் வனப்பகுதியைச் சேர்ந்த 1,829 ஏக்கர் ஆகியவையும் அடங்கும். "இந்தத் திட்டம் நிறை வேற்றப்பட்டுவிட்டால், காவிரியிலிருந்து தமிழகத்திற்கு ஒருசொட்டு நீர்கூட கிடைக்காது" என்று பார்வையிட்ட குழுவில் இடம் பெற்றிருந்த ஒருங்கிணைப்புக் குழு சேலம் செயலாளர் எம்.பெருமாள் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, கர்நாடக அரசு தமிழ்நாடு அரசு காவிரி-குண்டூர் நதிகளின் இணைப்பு மற்றும் மேட்டூர் சாபங்கா நீரேற்றுத் திட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. அத்துடன் மேகதாது அணைத் திட்டத்தை நிறைவேறியே தீருவோம் என்றும் கூறி வருகிறது.

பரிசீலிக்க வேண்டும்!

தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் இதுபற்றி கூறுகையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சாபங்கா திட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தனது சார்பிலான பதில் மனுவை இன்னமும் தாக்கல் செய்யாமல் உள்ளது. தமிழ்நாடு அரசு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் 2019 ஜூலை மாதத்தில் மேகதாதுத் திட்டத்திற்கு சுற்றச்சூழல் ஆய்வுக்கான நிபந்தனைகள் மற்றம் நோக்கங்களை இணைப்பதற்கு அனுமதி அளிக்காமல் தடுத்து விட்டது.

மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தில் நீர் ஆணையம் 2018 அக்டோபர் மாதத்தில் தெளிவான திட்ட அறிக்கை ஒன்றைத் தயார் செய்ய அனுமதி அளித்து விட்டது. இப்போது இதர காவிரி வளாக மாநிலங்களின் கருத்துக்களை கர்நாடக அரசு பரிசீலிக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு முன்பாக இத்திட்டத்தின் மீது தமிழக அரசின் எதிர்ப்பை முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மத்திய நீர்வளத் துறைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு "தி டைம்ஸ் ஆஃப்இந்தியா" ஆங்கில நாளேட்டின் சிறப்புச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories