இந்தியா

“இட ஒதுக்கீட்டை ஒழித்து, ஆர்.எஸ்.எஸ் திட்டத்தைச் செயல்படுத்தும் பா.ஜ.க அரசு” - கி.வீரமணி கண்டனம்!

“பொதுத்துறை நிறுவனங்கள் தாரை வார்ப்பு - ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதி பறிப்பே! வாக்களித்த மக்கள் வானத்தைத்தான் பார்க்கவேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தி.க தலைவர் கி.வீரமணி.

“இட ஒதுக்கீட்டை ஒழித்து, ஆர்.எஸ்.எஸ் திட்டத்தைச் செயல்படுத்தும் பா.ஜ.க அரசு” - கி.வீரமணி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மத்தியில் உள்ள பா.ஜ.க தலைமையிலான அரசு அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டுள்ள சோசலிசம் என்பதற்கு எதிராக தனியார்த் துறைகளுக்குப் பொதுத் துறை நிறுவனங்களைத் தாரை வார்த்து- இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் - உயர்ஜாதிக்கு ஆதரவாக செயல்படும் பா.ஜ.க அரசுக்கு எதிராக பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று இணைந்து போராடவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2014, 2019 ஆகிய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க ஆட்சி அமைந்த நிலையில், தங்களது அஜெண்டாவை சிறிதுகூட கூச்சநாச்சமின்றி செயல்படுத்தி, ஒரு நூறாண்டுக்கு மேற்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினராகிய தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் கல்வி, உத்தியோகங்களில் பெற்ற உரிமைகளை நாளும் பறிக்கும் முயற்சியை நேரடியாகவும், மறைமுகமாகவும் சிறிதும் தயங்காமல் செய்துவருவதோடு, உயர்வருணத்தாருக்கும், உயர் வர்க்கத்தவருக்குமான (கார்ப்பரேட் திமிலங்களான பெரு கொள்ளை லாபக் குபேரர்களுக்குமான) ஆட்சி என்பதை நாட்டிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றது!

மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மையினருமே! நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 85 முதல் 90 விழுக்காடு ஒடுக்கப்பட்ட மக்களே - வாக்காளர்களும் பெரிதும் அவர்களே - மக்களாட்சியில் பெரும்பாலானோரும் ஆவர்!

வாக்கு வங்கியில் உயர்ஜாதியினர் 10 முதல் 11 சதவிகிதம்தான்! பெருமுதலாளிகள் ஒரே ஒரு சதவிகிதம்தான். ஆனால், அவர்கள் வசம் உள்ள மீடியாக்களும், ஊடகங்களும், பெரும் செல்வந்தர்களும் பெரும்பான்மை வாக்காளர்களுக்கு ‘‘மயக்க பிஸ்கெட்டுகள்’’ தந்து, தாங்கள் விரும்பும் ஆட்சியைத் தங்களுக்குப் பாதுகாப்பான, வருணப் பாதுகாப்பு, வர்க்கப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முற்றிலும் அனுகூலமாக, நேரடியாக ஆட்சிக்கு வராமலேயே தங்களது ஏகபோக ஆட்சியைத் தங்கள் விருப்பம்போல் தங்கு தடையின்றி நடத்தி வருகின்றனர்!

74 ஆண்டுகால ‘சுதந்திரத்தில்’ ஜாதியால் கல்வி உத்தியோகம் மறுக்கப்பட்டு வந்த நாட்டில் ஒரு 50 ஆண்டுகளுக்குள் தான் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூக மக்கள் இட ஒதுக்கீட்டால் ஓரளவு பயன் பெற்று வருகின்றனர்.

பிற்படுத்தப்பட்டவர்கள் மத்திய அரசில் 27 சதவிகிதம் - அதுவும் காகிதத்தில் - பெயரளவுக்கு - போராடிப் பெற்றது, 30 ஆண்டுகள்கூட ஆகாத நிலையில், மீண்டும் உயர்ஜாதி ஆதிக்கமே ஆட்சி செலுத்தும் நிலை - அதுவும் ஜனநாயகப் போர்வை அணிந்துகொண்டே நடைபெறுகிறது!

“இட ஒதுக்கீட்டை ஒழித்து, ஆர்.எஸ்.எஸ் திட்டத்தைச் செயல்படுத்தும் பா.ஜ.க அரசு” - கி.வீரமணி கண்டனம்!

சமூகநீதிக் காவலர், மேனாள் பிரதமர் வி.பி.சிங் அழகாகச் சொன்னார்: ‘‘ஜனநாயகத்தில் இட ஒதுக்கீடு என்பது வெறும் இடங்களைப் பகிர்வது மட்டுமே அல்ல - அதைவிட முக்கியம் அதிகாரப் பகிர்வு’’ (Power- Sharing) என்றார். இப்போது அது அறவே பறிக்கப்படுகிறது. அதுவும் காட்சிக்கு ஒரு ‘‘பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரதமர்’’ என்பவரை வைத்தே ஆர்.எஸ்.எஸ். அதனை சாதித்துக் கொண்டு வருகிறது!

வேகமான தனியார் மயம் - பொதுத் துறை பங்குகளை விற்பதையும் தாண்டி, பொதுத் துறை நிறுவனங்களையே முழுக்க விற்பனை செய்து பெருமுதலாளிகள் வசம் ஆகிறது என்பதைவிட, அந்த நியமனங்களில் இதுவரை இருந்து வந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான இடங்களும், வாய்ப்புகளும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மண்டல் பரிந்துரை அமுலானதிலிருந்து கிடைத்த இடங்களும் இனி காணாமற் போகும்; காரணம் தனியார்த் துறை என்பது இட ஒதுக்கீடு இல்லாத துறையாகும். ஒரு கல்லில் ஆர்.எஸ்.எஸ். ஆட்சி இரண்டு மாங்காய்களை அடித்து சுவைக்கிறது!

இன்று (10.2.2021) ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில் வெளிவந்த ஒரு தகவலின்படி, மோடி அரசுமூலம் ஏற்பட்டுள்ள பொதுத் துறை அரிப்பு (Erosion) காரணமாக, எஸ்.சி.,க்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் திட்டமிட்டே வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (U.P.S.C.) பட்டியலிட்ட சிவில் சர்வீஸ் வேட்பாளர்களின் எண்ணிக்கை 2014-க்கும் 2018-க்கும் இடையில் 40 சதவிகிதம் குறைந்துள்ளது. (1236-லிருந்து 759 வரை குறைந்துள்ளது).

உயர்ஜாதியினரின் ஆதிக்கமும் உள்ளே ஏற்பட வசதியாக, EWS மூலம் (பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதியினர்) 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பதால், அவர்களை உள்ளே நுழையச் செய்ய வழிவகுத்துக் கொடுத்த நிலையில், உயர்ஜாதி ஆதிக்கக் கொடி உயர உயரப் பறக்கிறது!

(இட ஒதுக்கீட்டுத் தத்துவத்திற்கு நேர் எதிரானது இது! இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; காலங்காலமாக ஜாதியால், ஒடுக்குமுறையால் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு ஊன்றுகோல். (It is an adventitious aid; it is a propulsion) அது உதவி - மேலே பறப்பதற்கான தூண்டல் என்ற - உச்சநீதிமன்ற அறிவுரையை அறவே புறந்தள்ளி - 10 சதவிகித அரசமைப்புச் சட்ட அடிக்கட்டுமானத்துக்கு எதிரான சிதைப்புத் திருத்தம் செய்துள்ளது).

300 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்ப்பு!

பொதுத் துறை வங்கிகள் முழுதும் தனியார் மயம்!

விமான நிலையங்கள் தனியார் மயம்!

லாபம் தரும் ஆயுள் இன்ஷூரன்ஸ் துறை பங்குகள் பெரும் அளவில் தனியாருக்கு விற்க ஏற்பாடு!

ஏர் இந்தியா விமான நிறுவனமே விற்பனை!

ரயில்வேக்களில் பெரிதும் தனியார் மயம்!

இப்படி 300 பொதுத் துறை நிறுவனங்களைக் ‘காலி’ செய்து தனியார் மயமாக்கி, வெறும் 24 ஆகக் குறைக்க நிதி ஆயோக் திட்டமிட்டிருக்கும் அறிவிப்புகள் - செய்திகளாக வெளிவந்துள்ளன!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் (preamble) உள்ள லட்சிய வாசகங்கள் - Sovereign, Socialist, Secular, Democratic Republic என்பவை பகிரங்கமாகவே திசை மாற்றப்படும் அவலம் பெருகுகிறது. முகப்புரை அடிக்கட்டுமானம் - (Basic Structure of the Constitution) திருத்தங்களாலும் மாற்றப்பட முடியாதவை; கூடாதவை. ஆனால், இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் பிரதமர் மோடி தலைமையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆட்சி அவற்றைக் காற்றில் பறக்க விடுவதுபற்றி கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

‘‘வளர்ச்சி, வளர்ச்சி’’, ஓர் ஆண்டுக்குள் ‘‘சப்கே சாத்; சப்கா விகாஸ்’’ என்று பிரதமரின் முழக்கம் ஒரு பக்கம்; ஆனால், இதுதான் நாட்டின் நிறுவனங்களை விற்று, பறக்க சொகுசு விமானங்களை வாங்குவதுதான் சோஷியலிசமா? கலாச்சார தேசியமா? புரியவில்லை.

வாக்களித்த மக்கள் வானத்தைப் பார்க்கவேண்டியதுதானா? ஒடுக்கப்பட்டோரே ஒன்று சேர்ந்து சிந்தியுங்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories