இந்தியா

“JEE & NEET பாடத்திட்டத்தைக் குறைக்க முடியாது என கல்வி அமைச்சர் சொல்வது அபத்தமானது” : உதயநிதி ஸ்டாலின்

JEE & NEET தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தைக் குறைக்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் சொல்வது அபத்தமானது என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.

“JEE & NEET பாடத்திட்டத்தைக் குறைக்க முடியாது என கல்வி அமைச்சர் சொல்வது அபத்தமானது” : உதயநிதி ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளது அபத்தமானது என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் விதமாக சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டது. தமிழக பாடத்திட்டத்திலும் 40 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்ட மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேசுகையில், “சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகள் மற்றும் பிற மாநிலங்களின் பொதுத் தேர்வுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்படும்.

ஆனால், மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளான நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது. முழுமையான பாடத்திட்டத்தில் இருந்துதான் அத்தேர்வுகளுக்கான கேள்விகள் கேட்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி பாடத்திட்டத்திற்கு பகுதியளவும், அரசு நடத்தும் தேர்வுகளுக்கு முழுமையாகவும் படிக்கச் சொல்வது மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் எனக் கருதப்படுகிறது.

“JEE & NEET பாடத்திட்டத்தைக் குறைக்க முடியாது என கல்வி அமைச்சர் சொல்வது அபத்தமானது” : உதயநிதி ஸ்டாலின்

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “கொரோனாவால் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்பு மட்டுமே. ஆசிரியர்-மாணவர் நேரடி தொடர்பில் இல்லை. CBSE-யும், மாநில கல்வித்துறையும் பாடத்திட்டத்தை குறைத்துள்ளன. ஆனால் JEE & NEET தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தைக் குறைக்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் சொல்வது அபத்தமானது.

ஏற்கனவே, நீட் மாணவர்களைக் கொல்கிறது. பயிற்சி மையங்கள் கூட செயல்படாத இந்நேரத்தில், ஆசிரியர்கள் நடத்தாத பாடத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்பது மாணவர்களை மேலும் மன அழுத்தத்துக்கு ஆளாக்கும். எனவே, JEE- NEET தேர்வுக்கான பாடத்திட்டத்தைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories