இந்தியா

தொழிலதிபர்களை குறிவைத்து வேலையை காட்டும் மோசடி கும்பல்: ஏமாந்த சென்னைக்காரர்.. மும்பையில் நைஜீரியர் கைது!

தொழிலதிபர்களை குறிவைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்யும் நைஜீரிய கும்பலைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொழிலதிபர்களை குறிவைத்து வேலையை காட்டும் மோசடி கும்பல்: ஏமாந்த சென்னைக்காரர்.. மும்பையில் நைஜீரியர் கைது!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தொழில்நுட்பத்தின் உதவியால் வெளிநாடுகளிலிருந்து பேசுவதைப் போல பேசி தொழிலதிபர்களிடம் மோசடியில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் ராயல் மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மெத்தைகள், தலையணைகள் போன்ற பொருட்களை சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை செய்துவரும் தொழிலை செய்து வருகிறார். வெளிநாடுகளுக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறார்.

இந்நிலையில் ஜோசப் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். சமூக வலைதளம் மூலமாக லண்டனில் இருந்து எலிசபெத் என்ற பெண் தன்னை தொடர்புகொண்டதாகவும், தான் ஒரு தொழிலதிபர் என அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். லண்டனில் மருத்துவ குணங்கள் வாய்ந்த பொருட்களை வியாபாரம் செய்வதற்கு உதவுமாறு கேட்டதாகவும் கூறியுள்ளார். அவ்வாறு மருத்துவ குணங்கள் வாய்ந்த பொருட்களை வாங்கி ஏற்றுமதி செய்தால் கமிஷனாக அதிக தொகை தருவதாகவும் எலிசபெத் கூறியதாக தெரிவித்துள்ளார்.

புற்றுநோயை குணப்படுத்தும் போலிக் ஆயில் வேண்டும் எனவும், அந்தப் பொருள் மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் கிடைப்பதாக எலிசபெத் தொடர்பு எண்ணையும் கொடுத்துள்ளார். அவர்களிடமிருந்து போலிக் ஆயிலை வாங்கி தனக்கு ஏற்றுமதி செய்து தருமாறு எலிசபெத் கோரியுள்ளார். இதனை நம்பி சுனிதா என்பவரை தொடர்புகொண்டு ஜோசப் பேசியுள்ளார். மெயில் மூலமாக ஆர்டர்களை அனுப்பவேண்டும் என சுனிதா தெரிவித்ததை அடுத்து, 50 லிட்டர் ஆயில் வேண்டும் எனக் கூறி ஜோசப் மெயில் அனுப்பியுள்ளார். குறைந்தபட்சம் 200 லிட்டர் மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்படும் என்றும் 200 லிட்டர் போலிக் ஆயிலுக்கான தொகை 35 லட்ச ரூபாயையும் முன்கூட்டியே செலுத்தினால் மட்டுமே பொருட்களை அனுப்பமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எலிசபெத்திடம் ஜோசப் பேசுகையில், 200 லிட்டர் போலிக் ஆயில் வாங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் பொருட்களை வாங்கிய பிறகுதான் பணத்தை அனுப்ப முடியும் என எலிசபெத் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் இருக்கும் தாங்கள் பணம் கொடுத்து வாங்கி கொள்ளுமாறும், அதன்பின் கமிஷன் தொகையோடு சேர்த்து பணத்தை அனுப்பும்போது போலிக் ஆயிலை லண்டனுக்கு ஏற்றுமதி செய்து தருமாறு கூறி ஜோசப்பை நம்ப வைத்துள்ளார்.

இதனையடுத்து ஜோசப் 35 லட்ச ரூபாய் பணத்தை மும்பை நிறுவனம் கூறிய வங்கிக் கணக்கில் செலுத்தி போலிக் ஆயிலை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்து நீண்ட நாட்களாகியும் நிறுவனத்திலிருந்து பொருட்கள் வராததால் சந்தேகமடைந்த ஜோசப் விசாரித்துள்ளார். விசாரித்ததில் சுனிதா என்ற தொழிலதிபரும் மற்றும் மும்பையை சேர்ந்த நிறுவனமும் போலி என அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதே நேரத்தில் லண்டனில் உள்ள எலிசபெத்திடம் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதை அறிந்து, திட்டமிட்டு ஒரு கும்பல் மோசடி செய்ததை அறிந்து அதிர்ந்துள்ளார்.

ஜோசப் கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். லண்டனில் இருந்து பேசியதாக கூறப்படும் எலிசபெத் தொடர்புகளை ஆய்வு செய்தபோது வெளிநாட்டிலிருந்து பேசியது போன்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

மேலும் ஜோசப் பணம் செலுத்திய வங்கிக் கணக்கை ஆய்வு செய்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். குறிப்பாக கமாடிட்டி ஸ்கேம் என்ற பெயரில் மோசடிகள் இந்தியாவில் நடைபெறுவதாகவும், சென்னையில் மட்டும் 4 புகார்கள் உள்ளதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தியா முழுவதும் 20 மோசடிகள் நடந்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

நைஜீரியன் கும்பல் தொழிலதிபர்களை குறிவைத்து சமூக வலைதளம் மூலம் அணுகி மோசடி செய்து வருவதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஏற்றுமதி தொழில் புரியும் தொழிலதிபர்களை குறிவைத்து, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்து தருமாறு கோரி இதுபோன்ற மோசடிகள் அரங்கேறி வருவதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நைஜிரியன் கும்பலை தேடியதில் மும்பை அந்தேரியில் ஃபுல்ஜன் குவாடியோ கிரிஸ்டோபர் வில்மர் என்ற நைஜிரிய நாட்டை சேர்ந்த வாலிபரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். அதன்பின் சிவில் ஏவியேஷன் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

பிடிபட்ட நைஜீரியனோடு சேர்ந்து உடந்தையாக செயல்பட்ட மற்றவர்களையும் பிடிப்பதற்கு போலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர். அடுத்த கட்டமாக கைது செய்யப்பட்ட நைஜீரியனை காவலில் எடுத்து விசாரிக்கவும் மத்திய குற்றப்பிரிவு போலிஸார் முடிவு செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories