இந்தியா

“அமைதியாகப் போராடும் விவசாயிகள் மீது வீண்பழி சுமத்தி நெருப்பை வளர்க்கலாமா?” - கி.வீரமணி சாடல்!

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒருபுறம் பேச்சுவார்த்தை - மறுபுறம் மத்திய அமைச்சர்மூலம் பழிதூற்றுவது நியாயந்தானா என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

“அமைதியாகப் போராடும் விவசாயிகள் மீது வீண்பழி சுமத்தி நெருப்பை வளர்க்கலாமா?” - கி.வீரமணி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் நியாயமான போராட்டம் குறித்து பிரதமர் தனது அமைச்சர்களை ‘நா காக்க’ அறிவுறுத்தி, அமைதி வழியில் தீர்வினை எட்ட, விவசாயிகளின் குரலை புறந்தள்ளக்கூடாது - அதுதான் ஜனநாயக வழிமுறையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

“விவசாயிகளின் போராட்டம் உலகமே வியக்கத்தக்க வகையில், அறவழியில் டெல்லி புறநகர் எல்லைப் பகுதிகளில் 15 நாள்களாக தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மசோதாக்களை விவசாயிகளின் நலனுக்கு விரோதமான வகையில், அவசரக் கோலம் அள்ளித் தெளித்த கதைபோல், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக்கியுள்ளனர். நிறைவேற்றிய முறை - குறிப்பாக மாநிலங்களவையின் அமளி துமளியில் - ஓட்டெடுப்பு குரல் வாக்கின்மூலம் நிறைவேறியது என்று - அவையின் துணைத் தலைவர், மாநிலங்களவையில் அறிவித்ததை எதிர்த்தே குடியரசுத் தலைவர் வரை எதிர்க்கட்சித் தலைவர்கள் புகார் மனு அளித்து, தங்களது நியாயத்தைச் சுட்டிக்காட்டி ஜனநாயக முறை காப்பாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்!

இச்சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கே என்று பிரதமரும், அவரது ‘‘ஹிஸ்மாஸ்டர்ஸ் வாய்ஸ்’’ அமைச்சர்களும், தமிழ்நாட்டில் உள்ள - மத்திய அரசுக்குத் ‘தலையாட்டும் தம்பிரான்’களாக உள்ள அ.தி.மு.க. ஆட்சியாளரும் கோரஸ் பாடுகிறார்கள்!

1. விவசாயிகளிடம் முதலில் கலந்து பேசி, கருத்திணக்க முறையை (Consensus) கையாண்டிருந்தால், இந்நிலை வந்திருக்குமா?

2. மாநிலப் பட்டியலில் - ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள சில அதிகாரங்களை மத்திய அரசு கையில் எடுத்துக்கொண்டு சட்டம் இயற்றுவதற்கு முன்பு, ஒத்திசைவினை, மாநில அரசுகளின் கருத்தைக் கேட்டு - விவசாயிகளைக் கலந்திருந்தால் இப்படி ஒரு அறப்போர் தலைநகர் குலுங்க, உலகமே வியக்க - பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடும் நிலை ஏற்பட்டு இருக்குமா? ஒரு சிறு அசம்பாவிதம், வன்முறை என எதுவுமின்றிப் போராட்டம் நடத்திய விவசாயிகள்மீது, தண்ணீர் பீய்ச்சி அடித்தபோதும், கண்ணீர் புகை வீசி தடுத்த நிலையிலும்கூட, அறவழியில் அதனை எதிர்கொண்டனர்.

உணவுப் பொருள்களை அவர்களே கொண்டு வந்து சமைத்து, பரிமாறி உண்டு, ‘சாத்வீக’ முறையில் போராட்டம் - பல்லாயிரக்கணக்கான விவசாயிகளால் நடத்தப் பெறுகிறது! டெல்லியில் கடுங்குளிரில் நடுரோட்டில் 14 நாட்களாக அமர்ந்துள்ளனர்!

ஆரம்பத்தில், இந்தப் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டன என்று ஒரு பொய்ப் பிரச்சாரத்தைக் கூறியது ஆளும்கட்சியான பா.ஜ.க.வும், அதன் குரல் ஒலிக்கும் சில ஊடகங்களும்!

“அமைதியாகப் போராடும் விவசாயிகள் மீது வீண்பழி சுமத்தி நெருப்பை வளர்க்கலாமா?” - கி.வீரமணி சாடல்!

அது எடுபடவில்லை என்றவுடன், மத்திய மோடி அமைச்சரவையின் அமைச்சரான - நுகர்வோர் துறை அமைச்சர் ராவ்சாகேப் தன்வே என்பவர், ‘‘டெல்லியிலும், பிற மாநிலங்களிலும் நடந்துவரும் விவசாயிகளின் போராட்டப் பின்னணியில் பாகிஸ்தானும், சீனாவும் இருந்துகொண்டு தூண்டிவிடுவதாக’’, ஒரு அபாண்ட பழியை சுமத்திப் - பேசி, எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றிடும் முயற்சியில் பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார்!

இதுபோன்று தனது அமைச்சக சகாக்கள் பேசும்போது, அதனை பிரதமர் கண்டிக்கவேண்டாமா?

ஒருபுறத்தில் - 5, 6 முறை பேச்சுவார்த்தைக்கு விவசாயப் போராட்டப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவதும், மறுபுறத்தில் இப்படி மத்திய அமைச்சர்மூலம் பழி தூற்றுவதும் நியாயந்தானா?

பிரதமர் மோடி, ஜனநாயகத்தின் பெருமைபற்றியெல்லாம் நேற்று (10.12.2020) புதிய நாடாளுமன்றக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் கூறியுள்ளார்!

உண்மையாகவே அவர்கள் ஜனநாயகத்தை மதிக்கிறார்கள் என்றால், விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, புதிய விவசாய சட்டங்களை ரத்து செய்து, விவசாயிகளுடன் கலந்துரையாடி கருத்திணக்கம் கண்டு, நிறைவேற்றுவதுதானே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்!

அணைக்கத் தேவையானதை விட்டுவிட்டு, அத்தீ மேலும் கொழுந்துவிடும் வகையில் மத்திய அமைச்சர்கள் பேச்சுகள் - கருத்துக் கூறல் - வீண் பழி - அபவாதங்கள் தொடரலாமா?

பிரதமர் தனது அமைச்சர்களை ‘நா காக்க’ அறிவுறுத்தி, அமைதி வழியில் தீர்வினை எட்ட, விவசாயிகளின் குரலை புறந்தள்ளக்கூடாது - அதுதான் ஜனநாயக வழிமுறையாகும்!”

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories