மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ என்ற நடைமுறையை இந்த சட்டங்கள் நிர்மூலமாக்கி விடும் எனவும் விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த 8 நாட்களாக 6 மாநில விவசாயிகள் தற்போது டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைக் கலைக்க பா.ஜ.க அரசின் போலிஸார் தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு போன்ற முயற்சிகளில் ஈடுபட்டனர்.
தொடர் போராட்டங்களுக்குப் பிறகு சில விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு கடந்த டிசம்பர் 1ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்றும் விவசாயிகளுடனான மத்திய அரசின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் 35 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
அரசு தரப்பில் விவசாயத் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமருடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகத்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
தற்போதைய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிசெய்து சட்டம் இயற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தீவிர போராட்டத்தை தொடங்கிவிட்டோம். முடிவுக்குக் கொண்டுவருவது அரசின் கைகளில்தான் உள்ளது என பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் தருவதாக மத்திய அரசு தரப்பு விவசாயிகளிடம் தெரிவித்துள்ளது. ஆனால், அதனை விவசாய சங்கங்கள் நிராகரித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால் மத்திய அரசின் திட்டத்தை விவசாயிகள் ஏற்க மறுத்துள்ளனர்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது மத்திய அரசு விவசாயிகளிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடிக்கிறது.