இந்தியா

நோய் எதிர்ப்பு சக்தி பெற ‘மாட்டு சாண சிப்’ - ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் பேச்சு

செல்போன் கதிர்வீச்சில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாட்டு சாணத்தால் ஆன சிப் ஒன்றினை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளார் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர்

நோய் எதிர்ப்பு சக்தி பெற ‘மாட்டு சாண சிப்’ - ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் பேச்சு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் வராமல் தடுக்க, வந்தால் குணப்படுத்த என பல வகைகளில் மருந்துகள் இருக்கிறது என சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. உலக சுகாதார மையம் உள்ளிட்ட பல்வேறு நாட்டு அரசுகளும் கொரோனா வைரஸுக்கான மருந்துகள் தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், மற்ற நாடுகளை விட இந்தியாவிலேயே அதிகளவிலான வதந்திகளும் பொய்யான கூற்றுகளும் பரப்பப்பட்டு வருகின்றன. அவ்வகையில் பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். போன்ற பிற்போக்காளர்கள் பலர் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் மாட்டு சாணத்தினாலும், கோமியத்தினாலும் கொரோனாவை குணப்படுத்த முடியும் என பொதுவெளியில் கூறி வருகின்றனர்.

கொரோனா மட்டுமல்லாமல் டெங்கு போன்ற மற்ற நோய்களுக்கும் ஆதாரப்பூர்வமில்லாத செய்திகளை, வதந்திகளை பரப்பி மக்களை நம்ப வைத்து வருகின்றனர். இதற்கு பல்வேறு வகையில் பதிலடிகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கின் தலைவராக இருக்கக் கூடிய வல்லபாய் கதிரியா நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது, மாட்டு சாணம் அனைவரையும் பாதுகாக்கும். அது கதிர்வீச்சு தடுப்பாற்றல் கொண்டது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு கதிர்வீச்சு சிப் என மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட சிப் ஒன்றை காண்பித்து இதனை செல்போன்களில் பயன்படுத்தி கதிர்வீச்சுகளை கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் நோய்களை எதிர்த்து போராடவும் முடியும் எனக் கூறியுள்ளார்.

மாட்டு சாணத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிப்புக்கு கவ்சத்வ கவாச் என பெயரிடப்பட்டுள்ளது என்றும் கதிர்வீச்சில் இருந்து தங்களை காத்துக்கொள்ள இதனை பயன்படுத்துங்கள் என்றும் கதிரியா கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களின் கிண்டலுக்கும் ஆளாகி வருகிறது.

முன்னதாக கொரோனாவில் இருந்து தப்பிக்க, மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட முகக்கவசங்களை அணிந்து, மாட்டு சிறுநீரில் தயாரிக்கப்பட்ட கிருமி நாசினியை பயன்படுத்துங்கள் என இதே வல்லபாய் கதிரியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories