கோவிட்-19 எனும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 141 இந்தியர்கள், 25 வெளிநாட்டினர் என 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் 15 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், நோய்த்தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்காக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடாத வகையில் ஆங்காங்கே பற்பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதுவரை, டெல்லி, நாக்பூர், நொய்டா, புனே ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இப்படி இருக்கையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சராக உள்ள அஸ்வினி குமார் சௌபே, “கொரோனா வைரஸ் வராமலிருக்க தினமும் 15 நிமிடங்களுக்கு சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் உட்கார்ந்தால் வைட்டமின்-டி சத்து அதிகரிக்கும். அது கொரோனாவை கொல்லும்” கூறியுள்ளார்.
இது மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மாநில அரசுகளோ, வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள மக்களை பொதுவெளிக்கு செல்லக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
ஆனால், மத்திய அமைச்சராக உள்ள அஸ்வினி குமார் இவ்வாறு பேசியிருப்பது வதந்தியைப் பரப்பி மக்களின் உயிருடன் விளையாடுவதாக இருக்கிறது எனக் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், அறிவியல்பூர்வமாக இது நிரூபிக்கப்படாதபோது மக்கள் வெளியே வருவது நல்லதல்ல என்றும் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.