இந்தியா

“மனித உரிமைகளை முடக்கும் பா.ஜ.க அரசின் பெரும் திட்டத்தின் ஒருபகுதியே இது” - கனிமொழி எம்.பி சாடல்!

அம்னெஸ்டி அமைப்பு இந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ள நிலையில், எதிர்ப்பு குரல்களை முடக்கும் பா.ஜ.க-வின் பெரும் திட்டத்தின் ஒரு பகுதியே இது எனத் தெரிவித்துள்ளார் கனிமொழி எம்.பி.

“மனித உரிமைகளை முடக்கும் பா.ஜ.க அரசின் பெரும் திட்டத்தின் ஒருபகுதியே இது” - கனிமொழி எம்.பி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.க அரசின் குறுக்கீடுகளால் அம்னெஸ்டி அமைப்பு இந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ள நிலையில், எதிர்ப்பு குரல்களை முடக்கும் பா.ஜ.க-வின் பெரும் திட்டத்தின் ஒரு பகுதியே இது எனக் குற்றம்சாட்டியுள்ளார் கனிமொழி எம்.பி.

மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் தனித்துவம் மிக்க சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், பா.ஜ.க அரசின் குறுக்கீடுகளால் தங்கள் பணிகளை இந்தியாவில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

அம்னெஸ்டி இந்தியா, மனித உரிமைகள் பணிக்காக உள்நாட்டில் நிதி திரட்டுவதற்கான தனித்துவமான சர்வதேச அமைப்பாகச் செயல்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் அந்த அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இது பா.ஜ.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி, தங்கள் பணிகளை இந்தியாவில் நிறுத்திக் கொள்வதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அம்னெஸ்டி சர்வதேச அமைப்பின் இந்திய நிர்வாக இயக்குநர் அவினாஷ் குமார் கூறும்போது, “கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்னெஸ்டி அமைப்பின் மீதான தொடர்ச்சியான அடக்குமுறை, அவ்வமைப்பின் வங்கிக் கணக்குகள் இந்திய அரசால் முடக்கப்படுவது தற்செயலானது அல்ல.

அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசு முகமைகள் தொடர்ந்து எங்களுக்குத் தொல்லை கொடுத்தவண்ணம் இருந்தன. காரணம் அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தியதுதான்.

சமீபத்தில் டெல்லி கலவரம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து காவல்துறை மற்றும் இந்திய அரசுக்கு எதிராக எதிர்ப்புக் குரல்களைப் பதிவு செய்ய முடியாத அளவு அநீதி நிலவுகிறது.

அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புவதைத் தவிர இந்த அமைப்பு ஒன்றும் செய்துவிடவில்லை. எதிர்ப்பவர்களை ஒடுக்கும் முயற்சி நடக்கிறது. எனவே, அம்னெஸ்டி இந்தியாவில் பணிகளை நிறுத்திக் கொள்கிறது. அம்னெஸ்டி அமைப்பு மீதான இந்திய அரசின் பொய்க் குற்றச்சாட்டு மற்றும் அடக்குமுறையே இம்முடிவுக்குக் காரணம்” எனக் கூறியுள்ளார்.

“மனித உரிமைகளை முடக்கும் பா.ஜ.க அரசின் பெரும் திட்டத்தின் ஒருபகுதியே இது” - கனிமொழி எம்.பி சாடல்!

இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள தி.மு.க எம்.பி கனிமொழி, “நாட்டின் முன்னேற்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆற்றியுள்ள பெரும் பங்கை நிராகரிக்க முடியாது. கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் குறித்தவற்றில் இத்தொண்டு நிறுவனங்கள் அளப்பறிய பங்காற்றியுள்ளன.

இத்தகைய தொண்டு நிறுவனங்கள் இல்லாதிருந்தால், பல மனித உரிமை மீறல் சம்பவங்கள் மறைக்கப்பட்டிருக்கும் இத்தொண்டு நிறுவனங்கள் குரலற்றவர்களின் குரலாக இருந்து வருகின்றன.

மத்திய அரசு செயல்படுத்த உள்ள அந்நிய நிதி ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் 2020, எதிர்ப்பு குரல்களை முடக்கும் பா.ஜ.க-வின் பெரும் திட்டத்தின் ஒரு பகுதியே. இச்சட்டம் தொண்டு நிறுவனங்களை முழுவதுமாக முடக்கிவிடும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories