இந்தியா

“விவசாயிகளை பெருமுதலாளிகளின் அடிமைகளாக்கவே இந்த வேளாண் மசோதா” - டி.கே.எஸ்.இளங்கோவன் பளீர் உரை!

விவசாயிகள் இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளாதபோது நீங்கள் ஏன் இச்சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறீர்கள் என மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“விவசாயிகளை பெருமுதலாளிகளின் அடிமைகளாக்கவே இந்த வேளாண் மசோதா” - டி.கே.எஸ்.இளங்கோவன் பளீர் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விவசாயிகளுக்கு எதிரான இந்த மசோதா நிறைவேறினால், அதன் விளைவாக விவசாயிகள், விலைபொருள்களாக மாற்றப்படுவதோடு மரணத்தைத் தழுவ வேண்டிய சூழல்தான் உருவாகும் என மாநிலங்களவையில் விவசாய மசோதாக்களின் மீது உரையாற்றிய தி.மு.க எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் அவர் ஆற்றிய உரையின் விவரம் :

“இந்த மசோதாக்கள் விவசாயிகளும் முதலாளிகளும் விவசாய விளைபொருட்களை விற்பது வாங்குவது குறித்து சுதந்திரமாக உரையாடி ஒருமித்த முடிவுக்கு வருவதற்கென முன்மொழியப்பட்டுள்ளன. என்னுடைய இந்தப் பேனாவை வாங்கியபோது நான் இதன் உற்பத்தியாளரிடம் அமர்ந்து பேசி விலையை முடிவு செய்யவில்லை. உற்பத்தியாளர்கள் என்ன விலை நிர்ணயித்திருந்தாரோ அதே விலைக்குத்தான் வாங்கினேன்.

ஆனால் விவசாயிகள் பொருளை வாங்குபவரோடு அமர்ந்து பேசி தாங்கள் உழைத்து உற்பத்தி செய்த வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று இந்த மசோதா சொல்கிறது. விவசாயிகளுக்கு மட்டும் ஏன் இந்த பிரச்சினை? இது விவசாயிகளை அவமானப்படுத்தும் செயலாகும். இந்த சட்டமே விவாயிகளை அவமானப்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டம் என்றே சொல்வேன்.

“விவசாயிகளை பெருமுதலாளிகளின் அடிமைகளாக்கவே இந்த வேளாண் மசோதா” - டி.கே.எஸ்.இளங்கோவன் பளீர் உரை!
211371952006102

இந்த மசோதா இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட அவசரச் சட்டத்தை ரத்து செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டதாகக் தெரிவிக்கிறது. அத்தோடு இந்த மசோதா, கடந்த காலத்தில் பா.ஜ.க அரசு எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை முழுமையாகச் செயல்படுத்துவோம் என்று அளித்திருந்த உறுதிமொழியையும் முழுமையாக ரத்து செய்வதற்கெனவே கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை இந்த அவை நிறைவேற்றக் கூடாது. காரணம் வேளாண்மை மாநிலப் பட்டியலில் உள்ளது. விவசாயிகளைப் பாதுகாக்க, தி.மு.கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் ‘உழவர் சந்தை’ திட்டத்தைத் தொடங்கினார். உழவர் சந்தைக்கு விவசாயிகள் வேளாண் விளை பொருட்களைக் கொண்டு வருவார்கள். வாங்குபவர்கள் அங்கு வந்து அங்குள்ள மாநில அரசின் அதிகாரிகள் நிர்ணயம் செய்யும் விலைக்குப் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும்.

இந்தச் சட்டத்தில் ‘விவசாயிகளுக்கும் வாங்குபவர்களுக்கும் விலையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகள் தங்கள் சுதந்திரம் பறி போய்விடும் என்று நாடு முழுவதும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்கள். இச்சட்டம் வாங்குபவர்களுக்குதான் சுதந்திரம் வழங்குமேயன்றி விவசாயிகளுக்கு அல்ல. விவசாயிகள் இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளாதபோது நீங்கள் ஏன் இச்சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறீர்கள்? இந்தச் சட்டத்தைத் தூக்கி எறியுங்கள்.

தலைவர் அவர்களே, இந்தச் சட்டம் விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய உதவாது, விவசாயிகளையே விற்பனைப் பொருளாக்கத்தான் பயன்படும். விவசாயிகள் பெருமுதலாளிகளின் அடிமைகளாக ஆக்கப்படுவார்கள்.

அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஆப்பிரிக்க மக்கள் இன்னும் அடிமைகளாக நடத்தப்பட்டு கொலை செய்யப்படும் சூழ்நிலைக்கு ஆளாவதை நாம் இன்றும் பார்த்து வருகிறோம். அதுபோலவே, இந்தியாவின் மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 20 சதவிகித பங்களிப்பு வழங்கி வரும் விவசாயிகளும் அடிமைகளாக நடத்தப்படும் நிலையை இந்த மசோதா உருவாக்கும்.

இந்த மசோதா நிறைவேறினால், அதன் விளைவாக விவசாயிகள் விலை பொருள்களாக மாற்றப்படுவதோடு மரணத்தைத் தழுவ வேண்டிய சூழல்தான் உருவாகும்.” என உரையாற்றியுள்ளார்.

banner

Related Stories

Related Stories