தி.மு.க

“பிரதமர் மோடியின் 8 மணி அறிவிப்புகள் எல்லாமே கெட்ட செய்திதான்”-நாடாளுமன்றத்தில் கொந்தளித்த தயாநிதி மாறன்!

பிரதமர் மோடி கை தட்டவும், விளக்கு ஏற்றவும் சொன்னதே கொரோனா எங்கும் பரவக் காரணம் என தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

“பிரதமர் மோடியின் 8 மணி அறிவிப்புகள் எல்லாமே கெட்ட செய்திதான்”-நாடாளுமன்றத்தில் கொந்தளித்த தயாநிதி மாறன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பிரதமர் மோடி கை தட்டவும், விளக்கு ஏற்றவும் சொன்னதே கொரோனா எங்கும் பரவக் காரணம் என தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல், அலட்சியமாக நடந்து கொண்டதுமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு காரணம் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா பரவல் கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவில் கண்டறியப்பட்டபோதே உடனடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நாட்டின் அனைத்து எல்லைகளையும் மூடியிருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு அதனைச் செய்யாமல், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்பதற்கு ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியை குஜராத்தில் பிரமாண்ட நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் ட்ரம்ப்புடன் பிரதமர் மோடி புகைப்படம், வீடியோ எடுப்பதற்காக லட்சக்கணக்கான மக்களை ஒன்று திரட்டியதன் மூலம் அரசே கொரோனா பரவ வழிவகுத்தது. அதுமட்டுமல்லாது கொரோனா கட்டுப்பட்டுவதில் ஆரம்பத்தில் இருந்தே இந்த அரசு அக்கறையில்லாமல் மிக அலட்சியமாக நடந்து கொண்டது.

“பிரதமர் மோடியின் 8 மணி அறிவிப்புகள் எல்லாமே கெட்ட செய்திதான்”-நாடாளுமன்றத்தில் கொந்தளித்த தயாநிதி மாறன்!

குறிப்பாக எதற்காக ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு வந்து கெட்ட விஷயங்களையே அறிவிப்பாக வெளியிடுகிறார் என்று தெரியவில்லை. கடந்த 2016ல் இரவு 8 மணிக்கு பணமதிப்பிழப்பை அறிவித்தார். நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் பணத்தை எடுக்க வங்கி வாசலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அதேபோல மார்ச் 24ம் தேதி இரவு 8 மணிக்கு வந்து, ஊரடங்கை அறிவித்தார். பணமதிப்பிழப்பு போல, மாநில அரசுகளுக்கு முன்கூட்டி எந்த தகவலும் அளிக்காமல், திடீரென ஊரடங்கை பிரதமர் அறிவித்தார். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, அதற்காக மக்களுக்கு வழங்கப்பட்ட நேரம் வெறும் 4 மணி நேரம்தான். எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய முக்கியமான நேரத்தில், பிரதமர் மோடி அனைவரையும் கைதட்டவும், விளக்கு ஏற்றவும் சொன்னார்.

அவர் சொன்னாரே என மக்களும் வீட்டின் முன்பு விளக்கேற்றுவதற்கு பதிலாக அனைவரும் தெருவில் ஒன்று கூடி கைதட்டி, வெடி வெடித்து கொண்டி கொரோனாவை பரப்பினார்கள். மேலும், மருத்துவர்களுக்கு மரியாதை அளிப்பதாக கூறி ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவினார்கள்.

இவர்கள் தூவும் மலர்களுக்காக ஒருமணி நேரமாக மருத்துவர்கள் காத்திருக்க வைக்கப்பட்டனர். அந்த நேரத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருந்தால்கூட உபயோகமாக இருந்திருக்கும். ஆனால் இந்த நடவடிக்கையின் போது கொரோனா மேலும் அதிகரிக்கவே தொடங்கியது.

கொரோனாவை கட்டுப்படுத்த இருந்த பொன்னான வாய்ப்புகளை தவறவிட்டதை பிரதமரும், அமைச்சரவையும் உணர்ந்ததும், ஊரடங்கு அறிவித்ததைப் போலவே அதே வேகத்தில் அனைத்தையும் திறந்துவிட்டனர். இதனால், மக்கள் அனைவரும் வழக்கமான பணிகளுக்கு திரும்பி விட்டனர். அதனால் கொரோனாவை ஒழித்துவிட்டதாக நினைக்காதீர்கள். மக்கள் இன்னும் கொரோனா பீதியில் தான் வாழ்ந்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories